இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் நிறைவானது இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் 2022 ஆகஸ்ட் 15ஆம் திகதி மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
சுயசார்பு இந்தியாவையும் 75 ஆண்டுகால முன்னேற்றத்தையும் பல்வேறு செயற்பாடுகள் மற்றும் நிகழ்வுகள் மூலமாக பிரதிபலிக்கும் வகையில் உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ‘ஆசாதி கா அம்ரித் மஹோற்சவ்’ நிகழ்வுகளின் ஒரு பகுதியாக இந்தக் கொண்டாட்டங்கள் அமைந்துள்ளன.2. கொழும்பில் பிரதான நிகழ்வுகள் இந்திய உயர் ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான இந்திய இல்லத்தில் நடைபெற்றிருந்தன. இந்திய தேசியக்கொடியினை ஏற்றிவைத்த உயர் ஸ்தானிகர், அணிவகுப்பு மரியாதையையும் பார்வையிட்டார். அத்துடன் இந்திய ஜனாதிபதியின் சுதந்திர தினத்திற்கான செய்தியினையும் அவர் இச்சந்தர்ப்பத்தில் வாசித்திருந்தார்.
3. சுதந்திர தினத்திற்காக ஒழுங்கமைக்கப்பட்டிருந்த பல்வேறு கலாசார நிகழ்வுகள் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வுகளுக்கு மேலும் மெருகூட்டியிருந்தன. தேசபக்தியினையும் வீரத்தினையும் பிரதிபலிக்கும் பல்வேறு இசைத்தொகுப்புகள் இலங்கை கடற்படையின் இசைக்கலைஞர்களால் இச்சந்தர்ப்பத்தில் இசைக்கப்பட்டிருந்தன. அத்துடன், பாரத் கோ சலாம் பாடலுக்கு குரு சதாரா சுபதும் அவர்களின் மாணவர்கள் நடனமாடிய அதேவேளை வீரம், பாதுகாப்பு மற்றும் தாய்மை ஆகியவற்றை குறித்து நிற்கும் தெய்வமான துர்க்கைக்கான அர்ப்பணமாக கர்பா நடனமும் இங்கு அரங்கேற்றப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிகள் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்த நிலையில் இலங்கையிலுள்ள இந்திய சமூகத்தினரும் அத்துடன் இந்தியாவின் நண்பர்களும் மெய்நிகர் மார்க்கமாக இந்நிகழ்வுகளில் இணைந்திருந்தனர்.
4. மேலும், இலங்கையில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் பாதுகாப்பதற்காக தமது வாழ்வினை தியாகம் செய்த இந்திய அமைதிகாக்கும் படையைச் சேர்ந்த துருப்புகளின் நினைவாக அமைக்கப்பட்டிருக்கும் இந்திய அமைதிப்படை நினைவு தூபியில் உயர் ஸ்தானிகரும் ஏனைய அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
5. இதேபோல, கண்டியிலுள்ள துணை உயர் ஸ்தானிகராலயம், யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பாந்தோட்டையிலுள்ள கொன்சுலேட் ஜெனரல் காரியாலயங்கள் ஆகியவற்றிலும் சிறப்புமிக்க இத்தருணத்தை முன்னிட்டு விஷேட நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. இந்திய அரசாங்கத்தின் நன்கொடை உதவித் திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணக் கலாசார நிலையத்தில் யாழ்ப்பாணத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
6. மூவர்ணத்திலான இந்திய தேசியக்கொடிக்கு தமது மரியாதையினையும் அன்பினையும் புதுமையான பல்வேறு வழிகள் ஊடாக காண்பிக்கும் ஹர் கர் திரங்கா என்ற தொனிப்பொருளிலான நிகழ்வுகளில் இந்திய சமூகத்தினர் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தமை இந்த ஆண்டு நடைபெற்ற கொண்டாட்டங்களின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் அம்சமாகும்.
இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு
15 ஆகஸ்ட் 2022