புதுடெல்லி: இந்தியாவை இந்து நாடாக மாற்ற உத்தரபிரதேசத்தில் துறவிகள்சட்டதிட்ட வரைவை வகுத்துள்ளனர். இதில், தலைநகராக வாரணசியும், முஸ்லிம் கிறிஸ்தவர்களுக்கு வாக்குரிமை இல்லை என்பது போன்றவை இடம் பெற்றுள்ளன.
உ.பி.யின் வாரணாசியில் சங்கராச்சாரியா பரிஷத் அமைப்பின் தலைவர் சுவாமி அனந்த்ஸ்வரூப் ஒரு கூட்டம் நடத்தியுள்ளார். முக்கிய துறவிகளுடன் இந்துமத அறிவுஜீவுகள் சேர்த்துசுமார் 30 பேர் இதில் கலந்துகொண்டனர். இவர்கள், இந்தியாவை இந்து நாடாக மாற்றுவதற்கான சட்டதிட்டங்களுக்கான வரைவை தயாரித்துள்ளனர். அலகாபாத்தில் அடுத்த ஆண்டு ஜனவரியில் வரவிருக்கும் மக்மேளாவின்போது, துறவிகள் மாநாட்டின் முன் இந்த வரைவு குறித்து இறுதி முடிவு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘அகண்ட பாரதம்’ எனும் பெயரில் இந்து அரசின் கொள்கைகளாக மொத்தம் 750 பக்கங்களைக் கொண்டுள்ளது இந்த வரைவு. சுமார் 300 பக்கங்களில் முக்கிய சட்டங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. இதர பக்கங்களில், சட்டம், கல்வி, நிர்வாகம், பாதுகாப்பு, தேர்தல் உள்ளிட்டவற்றின் செயல்பாடுகளும் இடம் பெற்றுள்ளன.
அகண்ட பாரதம்
உ.பி. துறவிகள் வகுத்துள்ள இந்து நாட்டின் புதிய தலைநகராக வாரணாசி இருக்கும். தற்போதைய கல்வி முறை ஒழிக்கப்பட்டு குருகுலக் கல்வி அறிமுகமாகும். நாடாளுமன்றத்தை இனி தர்மசபை என அழைக்க வேண்டும்,16 வயதினருக்கு வாக்குரிமை அளிக்கப்படும். தேர்தலில் போட்டியிடும் வயது 25 என்றாகிறது. ஆனால், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு தேர்தல்களில் வாக்குரிமை அளிக்கப்படாது. இதுபோல், பலவும் மதநல்லிணக்கத்தை குலைக்கும் சர்ச்சைக்குரிய பல கொள்கைகள் இடம் பெற்றுள்ளதாக புகார்கள் கிளம்பியுள்ளன.
இதுகுறித்து இக்கூட்டத்தை நடத்திய சுவாமி அனந்த் ஸ்வரூப் கூறும்போது, ‘‘அகண்ட பாரதக் கொள்கையின்படி அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை மற்றும் மியான்மர் ஆகியவற்றை ஒரு நாள் இந்தியாவுடன் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. முஸ்லிம், கிறிஸ்தவர்கள் வாக்களிப்பதைத் தவிர மற்ற அனைத்தும் அனுபவிக்கலாம். சட்டங்கள் த்ரேத்தா, சுவப்ரா யுகங்களின்படி அமலாகும். ஒவ்வொரு குடிமகனுக்கும் ராணுவப் பயிற்சி கட்டாயம், விவசாயத்திற்கு வரி இல்லை’’ என்றார்.
கடவுள் உருவப்படங்கள்
கடந்த பிப்ரவரி மாதம் அலகாபாத்தில் அனைத்து மடங்களின் தலைமை துறவிகளின் தர்மசபைநடைபெற்றது. இதில் நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தின்படி இந்த இந்து நாட்டிற்கான சட்டதிட்ட கொள்கைகள் வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவிற்கான கூட்டத்தில் முக்கிய தலைவர்களாக சம்பவி பீடாதேஷ்வர், இந்து ராஷ்டிரிய நிர்மான் சமிதியின் தலைவர் கமலேஷ்வர் உபாத்யா, உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பி.என்.ரெட்டி, பாதுகாப்புத்துறையின் நிபுணர் ஆனந்த் வர்தன், சனாதன தர்மத்தின் அறிஞர்களான சந்திரமணி மிஸ்ரா, டாக்டர்.வித்யாசாகர் மற்றும் விஷ்வ இந்து மகா சங்கத்தின் தலைவர் அஜய்சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த வரைவில் இந்து கடவுள்கள் உள்ளிட்டோரின் உருவப்படங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இதில், துர்கா மாதா, ராமர், கிருஷ்ணர், கவுதம புத்தர், குரு கோவிந்த் சிங், ஆதி சங்கராச்சாரியா, சாணக்யர், வீர் சாவர்க்கர், ஜான்சி ராணி இலக்குமிபாய், பிருதிவிராஜ் சவுகான் மற்றும் சுவாமி விவேகானந்தர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.