இன்ஸ்டாகிராம் நண்பர் சொன்ன பணம், நகை பார்சல்… ரூ.15 லட்சத்தை இழந்த மும்பை பெண் – நடந்தது என்ன?!

ஆன்லைன் மோசடிகள் சமீப காலமாக அதிகரித்துள்ளது. சோஷியல் மீடியாக்களில் பழகும் நண்பர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. எத்தனையோ மோசடிகள் நடந்தாலும் மக்களிடம் அது பற்றிய விழிப்புணர்வு இல்லாமல்தான் இருக்கிறது. மும்பை அந்தேரி மரோல் பகுதியை சேர்ந்த ரக்‌ஷனா(24) என்ற பெண்ணிற்கு இன்ஸ்டாகிராமில் ஒருவர் நட்பு கோரிக்கை அனுப்பினார். அதில் தான் புளோரிடாவை சேர்ந்தவன் என்றும், தற்போது சிரியாவில் டாக்டராக பணியாற்றுவதாகவும் தெரிவித்தார். லேப் டெக்னீசியனாக வேலை பார்க்கும் அந்த பெண்ணும் உடனே அந்த அந்த நபரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். இருவரும் ஆன்லைனில் உரையாடிக்கொண்டனர். ஒரு கட்டத்தில் தனது சேமிப்புக்கள் அனைத்தும் புளோரிடாவில் இருப்பதாகவும், தனக்கு வேறு உறவுகள் இல்லாததால் அவை பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாக தெரிவித்தார்.

அதோடு அவற்றை உங்களிடம் அனுப்பி பாதுகாப்பாக வைத்திருக்க விரும்புவதாக அந்த நபர் ரக்‌ஷனாவிடம் தெரிவித்தார். உடனே ரக்‌ஷனாவும் தன்னிடம் அனுப்பி வைத்தால் பாதுகாப்பாக வைத்திருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து கடந்த மே 5-ம் தேதி ரக்‌ஷனாவிடம் பணம் மற்றும் நகைகள் இருக்கும் பார்சலை அனுப்பி இருப்பதாக தெரிவித்தார். அடுத்த சில நாள்களில் பார்சல் டெல்லிக்கு வந்திருப்பதாகவும் அதனை விடுவிக்க பல்வேறு வகையான கட்டணங்களை கட்டவேண்டும் என்று கூறி மே 6-ம் தேதியில் இருந்து ஜூலை 17-ம் தேதி வரை மர்ம நபர் ரூ.15 லட்சம் வரை ரக்‌ஷனாவிடமிருந்து வசூலித்துவிட்டார்.

ஆனாலும் ரக்‌ஷனாவிற்கு பார்சல் வரவில்லை. மோசடிக்காரர்கள் மேலும் 10 லட்சம் கேட்டனர். அதன் பிறகுதான் ரக்‌ஷனாவிற்கு சந்தேகம் வந்தது. உடனே இது குறித்து அவர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.