சென்னையில் நடைபெற்ற அமமுக பொதுக்குழுவில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், அமமுக எந்த தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் என்பது குறித்து கூறினார்.
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அமமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எம்.ஜி.ஆர் உருவாக்கிய இயக்கம் தற்போது அல்லப்பட்டு கொண்டிருப்பதைப் பார்க்கும்போது வருத்தம் அளிப்பதாகத் தெரிவித்தார். பதவி ஆசையால், அம்மாவுக்கே (ஜெயலலிதா) எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துள்ளதாகவும், அவர் திருந்த வாய்ப்பே இல்லை என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய, டிடிவி தினகரன், ஒரு குடும்பம் வாழ்வதற்காகவே திராவிட மாடல் போன்ற வார்த்தைகளை தி.மு.க அரசு பயன்படுத்தி வருவதாகவும், அது நமக்கெல்லாம் அவமானமாக உள்ளது எனவும் குற்றம் சாட்டினார்.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், அமமுக எந்த தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து விளக்கிப் பேசினார். அப்போது டிடிவி தினகரன் பேசியதாவது: “இரண்டு தேசியக் கட்சிகள் இருக்கிறது. கம்யூனிஸ்ட்டுகள் தேசியக் கட்சியாக இருந்தாலும் அவர்கள் எல்லா மாநிலத்திலும் இல்லை. இந்த இரண்டு தேசியக் கட்சிகளின் தலைமையில்தான், அடுத்த பிரதமர் யார் என்று தீர்மானிக்கிற போட்டி இருக்கும். அதனால், ஒன்று பாஜக கூட்டணி, இன்னொன்று காங்கிரஸ் கூட்டணி. காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறினால், அதிலும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால், அமமுக ஒரு மாநில கட்சி. நாம் தனித்து நின்று எந்த பயனும் இல்லை. நாம் பிரதமர் வேட்பாளர் என்று யாரையும் சொல்ல முடியாது. அதனால், இந்தியாவின் பிரதமரை உருவாக்குவதில் அனில் போன்ற செயல்பாட்டில் நாம் இருக்க வேண்டும் என்றால், இந்த இரண்டு தேசியக் கட்சிகளில், ஒரு கட்சியுடன்தான் நாம் கூட்டணி அமைப்போம். அது உறுதி. அதில் நீங்கள் செயல்படுங்கள்.” என்று அமமுக தொண்டர்களிடம் பேசினார்.
இதன் மூலம், டிடிவி தினகரன், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக, பாஜகவுடனோ அல்லது காங்கிரஸ் உடனோ கூட்டணி அமைக்கும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”