கோவை: ஓணம் பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு கோவையிலிருந்து – ஷார்ஜாவுக்கு இயக்கப்படும் ‘ஏர் அரேபியா’ விமானத்தில் முறுக்கு, சீடை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மிக அதிக அளவு புக்கிங் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன.
தொழில் நகரான கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் ‘ஏர் அரேபியா’ ஏர்லைன்ஸ் சார்பில், விமானம் இயக்கப்படுகிறது. இந்த விமானத்தில் ஒவ்வொரு முறையும் சராசரியாக 3 டன் சரக்குகள் ஏற்றிச் செல்லப்படுவது வழக்கம். பொதுவாக, காய்கறிகள் அதிக அளவு புக்கிங் செய்யப்படும். ஆனால் கடந்த சில நாட்களாக முறுக்கு, சீடை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அதிக அளவு புக்கிங் செய்யப்படுகின்றன.
இதுகுறித்து விமானநிலைய அதிகாரிகள் கூறியதாவது: கோவை – ஷார்ஜா இடையே இயக்கப்படும் ‘ஏர் அரேபியா’ விமானத்தில் ‘கார்கோ’ பிரிவில் காய்கறிகள், இன்ஜினியரிங் பொருட்கள் மட்டுமே அதிக அளவு ஏற்றிச் செல்லப்படுவது வழக்கம்.
ஆனால், கடந்த சில நாட்களாக முறுக்கு, சீடை, முறுக்கு மாவு, தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்கள் மிக அதிக அளவு புக்கிங் செய்யப்பட்டு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் இரண்டு டன் உணவு பொருட்கள் புக்கிங் செய்யப்படுகின்றன.
குறிப்பாக, முறுக்கு மாவு ஒவ்வொரு முறையும் 80 கிலோ மற்றும் அதற்கு மேல் கொண்டு செல்லப்படுகிறது. வரும் நாட்களில் பூக்களும் அதிகளவு புக்கிங் செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். இந்த நிலவரம் ஓணம் பண்டிகை முடியும் வரை தொடரும்.
இவ்வாறு விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.