இலங்கை கடற்படைக்கும் பாகிஸ்தான் கடற்படைக்கும் இடையில் இராணுவப் பயிற்சி நடைபெறவுள்ளதாக பல்வேறு ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
வெளிநாட்டு கடற்படைகளுடன் தொடர்பு மற்றும் நட்புறவை வளர்ப்பதற்கும், இலங்கை கடற்படை வீரர்களின் திறமைகளை மேம்படுத்தும் நோக்குடனும், வெளிநாட்டு கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு வந்து மீண்டும் திரும்பும் போது, அதே கடற்படையினருடனான உடன்படிக்கையுடன் இலங்கை கடற்படையால் நட்புரீதியான கடற்படை பயிற்சிகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.
அதன்படி, இந்த நட்புரீதியான கடற்படை பயிற்சியில் (Passage Exercise) பாகிஸ்தான் கடற்படை கப்பலான “தைமூர்” மற்றும் இலங்கை கடற்படை கப்பலான “சிந்தூரலா” கப்பல்களுக்கு இடையே கப்பல்களை கையாளுதல், தேடுதல் மற்றும் மீட்பு பயிற்சிகள் நடத்தப்பட உள்ளன.
மேலும், இலங்கை கடற்படையானது இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஜப்பான், ஜேர்மன், பிரித்தானியா, ரஷ்யா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற கடற்படைகளுடன் இதற்கு முன்னர் பல தடவைகள் இத்தகைய நட்புரீதியான கடற்படை பயிற்சிகளை (Passage Exercise) நடத்தியுள்ளது.
மேலும், பிராந்திய மற்றும் பிராந்தியமற்ற கடற்படைகளுடனான இத்தகைய கூட்டு கடற்படை பயிற்சிகள் ஊடாக அதிக ஒத்துழைப்புடன் பொதுவான கடல்சார் சவால்களை கூட்டாக சமாளிக்க உதவும். அத்துடன் இலங்கை கடற்படையால் மேற்கொள்ளப்படும் அனைத்து கடல்சார் நடவடிக்கைகளுக்கும் தேவையான புதிய அறிவு, உத்திகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் வாய்ப்பு கிடைக்கும்.