சென்னை: தமிழில் முன்னணி நடிகையாக வலம்வந்த மீனா, இப்போதும் சில படங்களில் நடித்து வருகிறார்.
மீனாவின் கணவர் வித்யாசாகர் சில தினங்களுக்கு முன்னர் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார்.
இதனையடுத்து கணவரை நினைத்து உருகிய மீனா தற்போது அதிரடியாக முடிவெடுத்துள்ளார்.
குழந்தை நட்சத்திரம் டூ ஹீரோயின்
1982 முதல் சினிமாத் துறையில் பயணித்து வரும் மீனா, சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். நடிப்பில் அவருக்கு இருந்த ஆர்வம், பின்னாளில் ஹீரோயினாக மாற வழிவகுத்தது. தெலுங்கில் பல படங்களில் நாயகியாக நடித்திருந்த மீனாவுக்கு, தமிழில் ‘என் ராசாவின் மனசிலே’ படம் மிகப் பெரிய அடையாளத்தைக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு திரைப்படங்களில் ஒரு ரவுண்டு வரத் தொடங்கினார்.
முன்னணி நடிகர்களுடன் ஜோடி
‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த மீனா, பல ஆண்டுகள் கழித்து ‘எஜமான்’ படத்தில், ரஜினிக்கே ஜோடியானார். ரஜினி மட்டும் இல்லாமல் விஜய்காந்த், கமல், பிரபு, சரத்குமார், சத்யராஜ், கார்த்திக், பார்த்திபன், முரளி என, 90களின் டாப் ஸ்டார்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்தார்.
வித்யாசாகருடன் திருமணம்
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிஸியாக இருந்த மீனா, சாப்ட்வேர் இன்ஜினியரான வித்யாசாகரை 2009ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு நைனிகா என்ற குழந்தையும் பிறக்க, திருமண வாழ்க்கையை சந்தோஷமாகவே கழித்துவந்தார். அதேநேரம், மோகன்லாலுடன் திரிஷ்யம், ரஜினியுடன் ‘அண்ணாத்தே’ என மீண்டும் நடிப்பில் பிஸியானார்.
கணவரை நினைத்து உருக்கம்
இந்நிலையில், யாரும் எதிர்பாராத நேரத்தில் மீனாவின் கணவர் வித்யாசாகர், உடல்நிலை சரியில்லாமல் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். உடல் உறுப்புகள் செயலிழந்ததால் வித்யாசாகர் பல மாதங்களாக சிகிச்சையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. கணவரை இழந்த மீனா தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்.
உடல் உறுப்புகள் தானம்
இந்நிலையில், சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தையொட்டி, மீனா தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மீனா, “என் கணவர் வித்யாசாகருக்கு உறுப்புகள் தானம்செய்ய யாராவது முன்வந்து இருந்தால் அவர் உயிர் பிழைத்திருப்பார். என் வாழ்க்கையும் மாறி இருக்கும். ஒருவர் உறுப்பு தானம் செய்வது மூலம் 8 பேருக்கு மறுவாழ்வு கிடைக்கிறது. இதன் முக்கியத்துவத்தை நான் உணர்ந்து கொண்டேன். அதனால் எனது உடல் உறுப்புகளை நான் தானம் செய்கிறேன்.” என அறிவித்துள்ளார். அவரின் இந்தப் பதிவு ரசிகர்களை அதிர்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.