தமிழகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சம் மற்றும் குடும்ப அரசியலை ஒழிக்க பாஜக கடுமையாக உழைக்கும் என அக்கட்சியின் மாநில தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
76வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தேசியக்கொடி ஏற்றினார். இதனைத் தொடர்ந்து கட்சித் தொண்டர்கள் மத்தியில் அண்ணாமலை பேசியதாவது:
75வது சுதந்திர தினம் முடிந்து, 76வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் தருணமிது. காஷ்மீரில் இருந்து கொண்டு வரப்பட்ட தேசியக் கொடியை இங்கு ஏற்றி உள்ளோம். சுதந்திரத்துக்கு பாடுபட்டதில் தமிழகத்தின் பங்கு மிக அதிகம். தமிழகத்தில் மருது சகோதரர்கள் முதல் பலர் சுதந்திரத்துக்காக போராடி உள்ளனர். கடந்த ஓராண்டாகவே சுதந்திரத்துக்காக பாடுபட்டவர்களை பாஜக கொண்டாடி வருகிறது. இன்று தமிழகத்தில் தேசியக் கொடி இல்லாத வீடுகளே இல்லை.
இந்தியா ஒற்றுமையின் வடிவம் என்பதை தமிழக மக்கள் காட்டி உள்ளனர். பலர் பாஜக அலுவலகங்களில் தேசியக் கொடியை பெற்று, தங்கள் இல்லங்களில் ஏற்றி உள்ளனர். இல்லந்தோறும் தேசியக் கொடி ஏற்றியமைக்காக அனைத்து தமிழ் மக்களுக்கும் பாஜகவின் நன்றிகள். அனைத்து துறைகளிலும் பெண்கள் வலிமையான இடத்தை பிடித்துள்ளனர் என்று பிரதமர் பேசியுள்ளார்.
இந்தியாவின் கண்முன் இருப்பது லஞ்சம், குடும்ப அரசியல் என்ற இரு பிரச்னைகள் தான் என்று பிரதமர் பேசியுள்ளார். ஏழை மக்கள், திறமை உள்ளவர்கள் முன்னேறிச் செல்ல லஞ்சம் தடையாக உள்ளது. லஞ்சம் வாங்குவோர், குடும்ப அரசியல் செய்வோரை ஒழித்து கட்ட வேண்டும்.
தமிழகத்தில் லஞ்சம், குடும்ப அரசியல் தலைவிரித்தாடுகிறது. இதை ஒழிக்க பாஜக கடுமையாக உழைக்கும். அடுத்த 25 ஆண்டுகள் முடிந்த உடன், தமிழகம், இந்தியாவின் விஷ்வ குருவாக வர வேண்டும். அதற்காக அனைவரும் உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.