கோரபுட்: ஒடிஷாவில் மாவோயிஸ்டுகளின் கோட்டையாக இருக்கும் மல்காங்கிரி மாவட்டத்தில் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் நாட்டின் சுதந்திர தினம் உணர்வுப்பூர்வமாக கொண்டாடப்பட்டது. மாவோயிஸ்டுகளின் கோட்டையில் இப்போது தேசத்தின் மூவர்ண கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது.
ஆயுதப் புரட்சியின் மூலம், அதிகாரத்தைக் கைப்பற்றுதல் என்ற கோட்பாட்டைக் கொண்ட மாவோயிஸ்டுகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக அரசுக்கு எதிரான யுத்தத்தை நடத்தி வருகின்றனர். நாட்டின் பல மாநிலங்களில் விரிந்து பரந்து, அரசுக்கு சிம்ம சொப்பமணமாக மாவோயிஸ்டுகள் திகழ்ந்தது ஒரு காலம்.
ஒடிஷா, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தமிழகம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பீகார் என பல மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் கொடி பறந்தது. குறிப்பாக ஒடிஷா-ஆந்திரா- சத்தீஸ்கர் மாநில எல்லைப் பகுதிகள்தான் மாவோயிஸ்டுகளின் தலைமைப் பகுதியாக இருந்தது.
ஒடிஷாவின் கோரபுட், மல்காங்கிரி வனப்பகுதிகள் இந்த 3 மாநிலங்களிலும் விரிந்து பரந்து கிடக்கிறது. இதுதான் மாவோயிஸ்டுகளுக்கும் வசதியாக இருந்தது. இப்பகுதிகளில் திராவிடர் மரபினம் சார்ந்த ஆதி பழங்குடிகள் பெரும் எண்ணிக்கையில் மலை முகடுகளில் வசிக்கின்றனர். இவர்கள் அல்லாமல் போண்டா பழங்குடிகள் வசிக்கின்றனர். இந்த ஆதி பழங்குடிகள் வாழ்விடங்களை அரசு கட்டமைப்புகள் நெருங்கி செல்வது பெரும் போராட்டமானதாக இருந்தது. அதனால் நாடு விடுதலை அடைந்து சில ஆண்டுகள் முன்புவரை மின்சார வசதி கூட கிடைக்காத கிராமங்களாக இந்த மலைகிராமங்கள் இருந்தன. இதுவே மாவோயிஸ்டுகள் பதுங்கவும் ஆட்சேர்க்கவும் வசதியாகவும் போனது.
சீனா, பாகிஸ்தான் எல்லைகளில் கடமையாற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் கூட மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் களத்துக்கு வரவழைக்கப்பட்டனர். பழங்குடி மக்களுக்கும் அரசுக்கும் இடையேயான இடைவெளி கணிசமாக குறைக்கப்பட்டது. இதனால் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் படிப்படியாக குறையவும் தொடங்கியது.
நாட்டின் ஒவ்வொரு சுதந்திர தினம், குடியரசு தினத்தின் போது இந்நிகழ்ச்சிகளை சீர்குலைப்பதையே வாடிக்கையாக வைத்திருந்தனர் மாவோயிஸ்டுகள். ஆனால் 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டு முதல் முறையாக மாவோயிஸ்டுகளின் கோட்டையான ஒடிஷாவின் கோரபுட், மல்காங்கிரியில் பழங்குடி மக்கள் மிகவும் எழுச்சியுடன் தேசியக் கொடி ஏற்றி கொண்டாடித் தீர்த்தனர். மாவோயிஸ்டுகளின் நினைவிடங்களில் கூட நமது தேசியக் கொடி பட்டொளி வீசி பறந்தது இம்முறை!