சென்னை: “நாங்கள் அதிமுகைவை விமர்சிக்கவில்லை. அதனால் அதிமுகவுடன் ஒருங்கிணைந்து செல்வோம் என்று அவர்கள் நினைக்கலாம். ஆனால், எங்கள் கட்சியில் உள்ள தொண்டர்களும் சரி, கட்சியினரும் சரி, யாருமே சசிகலாவையும், தினகரனையும் ஏற்றுக்கொள்வதாக இல்லை” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோயம்பேட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “பலமுறை நாங்கள் கூறிவிட்டோம். அதிமுகவில், சசிகலா மற்றும் டிடிவி தினகரனை சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை. நூறு அல்ல, லட்சம் அல்ல, கோடி சதவீதம் கூட வாய்ப்பே இல்லை. அவ்வாறு நடப்பதற்கு வாய்ப்பே இல்லை.
இரட்டை இலையை எதிர்த்து தேர்தலில் நின்று, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அரசையே கவிழ்க்க நினைத்தவர்கள் அவர்கள். இன்றைக்கு பாசாங்கு செய்வது போல, அதாவது பசுந்தோல் போர்த்திய நரிதான் என்று சொல்வேன், புலியென்றுகூட சொல்லமாட்டேன்.
நாங்கள் அதிமுகைவை விமர்சிக்கவில்லை. அதனால், அதிமுகவுடன் ஒருங்கிணைந்து செல்வோம் என்று அவர்கள் நினைக்கலாம். ஆனால், எங்கள் கட்சியில் உள்ள தொண்டர்களும் சரி, கட்சியினரும் சரி, யாருமே சசிகலாவையும், தினகரனையும் ஏற்றுக்கொள்வதாக இல்லை” என்று அவர் கூறினார்.