வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
துபாய் : ‘எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலில், ஈரான் அரசுக்கு தொடர்பு இல்லை’ என, அந்நாட்டு வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
இந்திய வம்சாவளி எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, 75, ‘தி சட்டானிக் வெர்சஸ்’ என்ற நாவலை, 1988ல் வெளியிட்டார். இதற்கு, முஸ்லிம் நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ருஷ்டியை படுகொலை செய்ய வேண்டும் என, அப்போதைய ஈரான் அதிபர் அயதுல்லா கோமேனி பகிரங்கமாக அறிவித்தார். ருஷ்டியை படுகொலை செய்ய நடந்த பல்வேறு முயற்சிகளில், அவர் உயிர் தப்பினார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டன் மற்றும் அமெரிக்க குடியுரிமை வைத்துள்ள ருஷ்டி, இரு நாடுகளிலும், மாறி மாறி வசித்து வருகிறார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது, மேடை ஏறிய நபர், சல்மான் ருஷ்டியை கத்தியால் பலமுறை குத்தினார். இதில், ருஷ்டியின் கழுத்து, வயிறு மற்றும் கையில் படுகாயங்கள் ஏற்பட்டன.
உடனடியாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கத்திக் குத்தில், அவரது கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கண் மற்றும் கையில் நரம்பு துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும், அவரது ஒரு கண்ணில் பார்வை பறிபோக வாய்ப்புள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், ”சல்மான் ருஷ்டி மீது நடந்த தாக்குதலுக்கும் ஈரான் அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை,” என, ஈரான் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் நாசர் கனானி தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement