சென்னை : இந்தியாவின் 75வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நாளைய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி மறைந்த நடிகர் சிவாஜி கணேஷனின் வீட்டில் 3 இடங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து ரசிகர்களும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற ஆர்வம் காட்டி வருகின்றனர்.
75வது சுதந்திர தினம்
நாட்டின் 75வது சுதந்திர தினம் நாளைய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பல்வேறு தியாகங்கள், போராட்டங்களை அடிப்படையாக கொண்ட இந்த சுதந்திரக் காற்றை நாமெல்லாம் தற்போது அனுபவித்து வருகிறோம். இதற்காக நமது முன்னோர்கள், தலைவர்கள் அனுபவித்த வலி கொஞ்சம் நஞ்சமல்ல.
வீடுகளில் தேசியக் கொடி
இந்நிலையில் நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி கடந்த 13ம் தேதி முதல் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார். இது ஒரு இயக்கமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதையொட்டி திரைத்துறை பிரபலங்களும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டவர்களும் இந்த இயக்கத்தில் பங்கேற்றுள்ளனர்.
சிவாஜி வீட்டில் தேசியக் கொடி
இதனிடையே மறைந்த சிவாஜி கணேசனின் வீட்டில் தற்போது தேசியக் கொடி மூன்று இடங்களில் ஏற்றப்பட்டுள்ளது. நடிகர் பிரபு மற்றும் விக்ரம் பிரபுவும் தற்போது இந்த வீட்டில்தான் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் இந்த பிரம்மாண்டமான அன்னை இல்லம் வீட்டில் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
படங்கள்மூலம் சுதந்திரத்தை ஊட்டியவர்
கப்பலோட்டிய தமிழன் உள்ளிட்ட பல படங்களில் சுதந்திரத்திற்காக உழைத்த மாபெரும் தலைவராக நடித்துள்ளார் நடிகர் சிவாஜிகணேசன். இவரது இத்தகைய படங்கள் தேசிய உணர்வை மக்களிடம் மிகவும் அழகாக கடத்தின. அந்த வகையில் இவரது பல படங்களில் இந்த வரிசையில் இடம்பெற்றுள்ளன.
சிறப்பான நடிகர்
நடிகர் சிவாஜிகணேசன் சிறப்பான பல படங்களில் நடித்து ரசிகர்களை அதிகமாக கவர்ந்தவர். இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் இவரது மற்ற படங்களுக்கே போட்டியாக அமைந்தன. அந்த அளவில் சிறப்பான படைப்பையும் வசூல் மழையையும் பொழிந்தவர் இவர். இவரது வரிசையில் நடிகர் பிரபுவும் தன்னை சிறப்பான நடிகராக வெளிப்படுத்தினார்.
3வது தலைமுறை நடிகர்
இரண்டு தலைமுறைகளை கடந்து தற்போது மூன்றாவது தலைமுறையாக விக்ரம் பிரபுவும் தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரது டாணாக்காரன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் இவர்களது வீட்டில் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.