தவுபால்: மணிப்பூரில் சுதந்திர தினத்தில் வெடிகுண்டுகளை வைக்க திட்டமிட்டிருந்த 7 பேர் கொண்ட போராளிகளை கூட்டுப் படை குழு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். நாடு முழுவதும் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், வடகிழக்கு மாநிலங்களின் எல்லையில் போராளிகள் அமைப்பை சேர்ந்த சிலர், சதி வேலைகளில் ஈடுபட தயாராக இருப்பதாக உளவுத் தகவல்கள் கிடைத்தன. அதையடுத்து மணிப்பூர் காவல்துறை மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையின் கூட்டுக் குழு, மணிப்பூரின் பல்வேறு மாவட்டங்களில் அதிரடி சோதனைகளை நடத்தியது. அப்போது மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட மக்கள் விடுதலை படையை (பிஎல்ஏ) சேர்ந்த போராளிகள் ஏழு பேரை கைது செய்தது. இதன் மூலம் சுதந்திர தினத்தில் வெடிகுண்டுகளை வைக்கும் முயற்சியை முறியடிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். இதுகுறித்து தவுபால் மாவட்ட போலீஸ் எஸ்பி ஜோகேஷ்சந்திர ஹாபிஜம் கூறுகையில், ‘தவுபல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு நிறுவனங்களில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யவும், பாதுகாப்புப் படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தவும், கைது செய்யப்பட்ட 7 பேரும் திட்டமிட்டிருந்தனர். தற்போது அவர்களது சதி முறியடிக்கப்பட்டுள்ளது. தவுபல் மாவட்டத்தின் யார்போக் பஜார் பகுதியில் பதுங்கியிருந்த அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து இரண்டு 9எம்எம் பிஸ்டல்கள், 35 தோட்டாக்கள், இரண்டு கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன. வெடிகுண்டுகளை வெடிக்க செய்வதற்காக வழிமுறைகளை ரிஷிகாந்தா என்பவர் பயிற்சி கொடுத்துள்ளான். அவனையும் கைது செய்துள்ளோம். கைது செய்யப்பட்ட போராளிகளில் சிலர் கடந்த ஜூன் 23ம் தேதி கக்ச்சிங்கிலும், ஜூலை 8ம் தேதி இம்பால் கிழக்கிலும் வெளியூரைச் சேர்ந்த சிலரை கொன்ற வழக்கில் தொடர்புடைவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது’ என்றார்.