புதுடெல்லி: சுதந்திர தினத்தையொட்டி 1,082போலீஸாருக்கு காவல் துறை பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது. 2022-ம் ஆண்டு சுதந்திரதினத்தையொட்டி 1,082 போலீஸாருக்கு காவல் துறை பதக்கங்கள் அறிவிக்கப்படுகிறது. இவற்றில் வீரச்செயலுக்கான காவல் பதக்கங்கள் 347 பேருக்கு வழங்கப்படுகின்றன. மிகவும் சிறப்புமிக்க குறிப்பிடத்தக்க சேவைக்கான குடியரசு தலைவரின் காவல்துறை பதக்கம் 87 பேருக்கும், சிறந்த சேவைக்கான காவல் பதக்கம் 648 பேருக்கும் வழங்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரில் துணிச்சலாக பணியாற்றிய 204 போலீஸாருக்கும், மாவோயிஸ்ட் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துணிச்சலாக பணியாற்றிய 80 போலீஸாருக்கும், வடகிழக்கு மாநிலங்களில் துணிச்சலாக செயல்பட்ட 14 போலீஸாருக்கும் வீரச் செயலுக்கான காவல் பதக்கங்கள் வழங்கப்படுகிறது.
சிறந்த சேவைக்கான காவல் பதக்கம் பெற்றவர்களில் 109 பேர் சிஆர்பிஎப், 108 பேர் காஷ்மீர் காவல் துறை, 19 பேர் பிஎஸ்எப், 42 பேர் மகாராஷ்டிரா, 27 பேர் தமிழகம், 15 பேர் சத்தீஸ்கரை சேர்ந்தவர்கள் ஆவர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.