சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கோயில்களில் இன்று சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நடைபெற உள்ளது.அமைச்சர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிகளில் சாதி,சமய ஏற்றத் தாழ்வு இன்றி நடைபெற வேண்டும் என்று இந்து சமய அற நிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று கோயில்களில் சிறப்பு வழிபாடும், பொது விருந்தும் நடைபெறுவது வழக்கம். இதன்படி, சுதந்திர தினமான இன்று இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற உள்ளது.
சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பங்கேற்கிறார்.
இதே போல், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கூட்டுறவு துறை அமைச்சர் இ.பெரியசாமி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, வடபழனி முருகன்கோயிலில் தங்கம் தென்னரசு, கோயம்பேடு குறுங்காலீஸ் வரர் கோயிலில் சமூகநலத் துறைஅமைச்சர் கீதா ஜீவன், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயிலில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உட்பட சென்னை மண்டலத்தில் உள்ள 33 கோயில்களில் அமைச்சர்கள் சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்தில் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்துவது குறித்து அதிகாரிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் அனுப்பியுள்ள வழிகாட்டுதலில் கூறியிருப்பதாவது:
சிறப்பு வழிபாடு, பொது விருந்து நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்தும் ஆதி திராவிடர்கள் பெருமளவில் கலந்து கொள்ளும் வகையிலும் ஆலோசித்து நல்ல முறையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். சிக்கனமான முறையில் சாதி, சமய ஏற்றத் தாழ்வு இன்றி சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற வேண்டும்.
பருத்திப் புடவை. வேட்டி
சிறப்பு வழிபாடு, பொது விருந்து நிகழ்ச்சிக்கு தயாரிக்கப்படும் உணவு வகைகள் மற்றும் குடிதண்ணீர் சுத்தமாகவும், சுகாதார முறையிலும் உள்ளதை கோயில் செயல் அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். சிறப்பு வழிபாடு, பொது விருந்தின்போது கோயில்களில் உபரியாக உள்ள பருத்திப் புடவை. வேட்டிகளை ஏழை எளியோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த வழிகாட்டுதலில் அவர் கூறியுள்ளார்.