புதுடெல்லி: நாட்டின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி செங்கோட்டையில் கொடி ஏற்றிவிட்டு, நாட்டு மக்களுக்காக உரையாற்றி இருந்தார். அப்போது தனது உரைக்கான குறிப்புகளுக்காக காகிதத்தை பயன்படுத்தி இருந்தார். வழக்கமாக பிரதமர் மோடி தனது சிறப்புரை பேச்சுகளின் போது டெலி பிராம்ப்டரை பயன்படுத்துவது வழக்கம்.
பாரம்பரியமிக்க செங்கோட்டையில் 76-வது சுதந்திர தின விழாவில் நாட்டின் பிரதமர் என்ற முறையில் கொடியை ஏற்றிய கையோடு சுமார் 1 மணி நேரம் 23 நிமிடங்கள் வரை பேசி இருந்தார். அதில் நாட்டின் விடுதலைக்கான வேள்வி தொடங்கி, சுதந்திர போராட்ட வீரர்கள், தேசத்தின் வளர்ச்சிக்கான கட்டமைப்பில் பங்கு கொண்டவர்கள் குறித்தும் பேசி இருந்தார்.
அதோடு நாட்டின் நூற்றாண்டு சுதந்திர விழா கொண்டாட்டத்தின் போது தேசத்தை வல்லரசு ஆக்கும் நோக்கில் அதற்கான அர்ப்பணிப்பு இளைஞர்களுக்கு அவசியம் எனவும் தெரிவித்திருந்தார்.
5ஜி தொழில்நுட்பம் குறித்தும் பேசி இருந்தார். டிஜிட்டல் இந்தியாவின் பங்கு குறித்தும் குறிப்பிட்டிருந்தார். செங்கோட்டையில் 9-வது முறையாக பிரதமர் மோடி ஆற்றிய சுதந்திர தின உரை இது.
இத்தகைய நிலையில் முதல் முறையாக தனது சுதந்திர தின உரையில் டெலி பிராம்ப்டரை தவிர்த்துள்ளதாக தெரிகிறது. எப்போதும் சிறப்புரை ஆற்றும் போது பிரதமர் மோடி டெலி பிராம்ப்டரை பயன்படுத்துவது வழக்கம்.