சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் இருந்து கிடைக்கும் நீர் மூலம் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஏரிகளில் போதுமான அளவு நீர் இருப்பதால் கிருஷ்ணா நதிநீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. பூண்டி ஏரியில் 974 மில்லியன் கன அடியும், சோழவரம் ஏரியில் 131 மில்லியன் கன அடியும், புழல் ஏரியில் 2 ஆயிரத்து 970 மில்லியன் கன அடியும், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரியில் 500 மில்லியன் கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் 3 ஆயிரத்து 200 மில்லியன் கன அடியும், வீராணம் ஏரியில் 1,465 மில்லியன் கன அடியும் நீர் இருப்பு உள்ளது.
சராசரியாக அனைத்து ஏரிகளிலும் 70 சதவீதம் இருப்பு உள்ளது. அனைத்து ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13 ஆயிரத்து 222 மில்லியன் கன அடியில் (13.22 டி.எம்.சி.) தற்போது 9 ஆயிரத்து 240 மில்லியன் கன அடி (9.24 டி.எம்.சி.) நீர் இருப்பு உள்ளது.
இதன் காரணமாக சென்னையில் அடுத்த 9 மாதத்துக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.