சென்னை: அரசுப் பேருந்து மோதி பள்ளி மாணவி உயிரிழப்பு – ஓட்டுநர் காவல்நிலையத்தில் சரண்

சென்னையில் தனியார் பள்ளியில் சுதந்திர தின விழாவை கொண்டாடிவிட்டு சைக்கிளில் வீடு திரும்பியபோது மாநகரப் பேருந்து மோதி 12-ம் வகுப்பு மாணவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மாநகரப் பேருந்து ஓட்டுநர் சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
சென்னை குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரம், ராஜேந்திர பிரசாத் சாலையில் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 12-ம் வகுப்பு பள்ளி மாணவி லட்சுமி ஸ்ரீ(17), மாநகரப் பேருந்து மோதி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். குரோம்பேட்டையில் உள்ள பள்ளியில் சுதந்திர தின விழாவை கொண்டாடி விட்டு தனது சக தோழியுடன் சைக்கிளியில் வீடு திரும்பியபோது, பொழிச்சலூரிலிருந்து அஸ்தினாபுரம் சென்ற தடம் எண் 52H என்ற அரசுப் பேருந்து மோதியது. இதில் கீழே விழுந்ததில் பின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
image
விபத்தை ஏற்படுத்தி விட்டு ஓட்டுநர் தப்பியோடிவிட்டார். இதனைத் தொடர்ந்து தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய ஓட்டுநரை போலீசார் தேடி வந்தனர். மேலும் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருந்தன.
image
இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய மாநகரப் பேருந்து ஓட்டுநர் தேவகுமார் (49), சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது. மேலும் விபத்து ஏற்பட்ட இடத்தில் மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் 10-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சியையும், தமிழக அரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். சாலையில் ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பதால் தான் விபத்து ஏற்படுகிறது அதனை அகற்றிட வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.