புதுடில்லி : சென்னை ஐ.ஐ.டி.,யின் முன்னாள் மாணவர்கள், தங்கள் கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பணிகளுக்காக மூன்று கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர்.நாட்டின் தலைசிறந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில், சென்னை ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப கழகம் – சென்னை முதலிடம் வகிக்கிறது. இங்கு, 1978ம் ஆண்டு படித்த மாணவர்கள், தற்போது உலகின் பல்வேறு பகுதிகளிலும் மிக முக்கியப் பதவிகளை வகித்து வருகின்றனர்.
இந்த முன்னாள் மாணவர்கள், தங்களுடன் படித்து, அமெரிக்காவில் உள்ள கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் உயர் பதவியில் இருக்கும் பிரகாஷ் கிருஷ்ணசுவாமியின் நினைவாக ‘பிரகாஷ் என்டோவ்மென்ட்’ என்ற பெயரில் அறக்கட்டளை நிறுவியுள்ளனர்.அந்த அறக்கட்டளை சார்பாக நன்கொடையாக மூன்று கோடி ரூபாயை சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடியிடம் அளித்துள்ளனர்.
இந்த தொகை, திறமையான இளம் மாணவர்களுக்கு விருது அளிக்கவும், அவர்கள் உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆய்வகங்களில் பயிற்சி மேற்கொள்ளவும் உதவும். இது குறித்து சென்னை ஐ.ஐ.டி.,யின் டீன் மகேஷ் பஞ்சகுனுலா கூறியதாவது: எங்கள் கல்வி நிறுவனத்தில் 1978ம் ஆண்டு படித்த மாணவர்கள் காட்டிய அன்புக்கு நன்றியுடையவர்களாக இருப்போம். தங்களுக்கு கல்வி புகட்டிய நிறுவனத்தை மறக்காமல், அவர்கள் கொடுத்த இந்த தொகை உரிய முறையில் பயன்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement