சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கிக்கு சொந்தமான நகைக்கடன் நிறுவனத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 18 கிலோ தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை சென்னைப் பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பார்வையிட்டார்.
கடந்த சனிக்கிழமையன்று சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கிக்கு சொந்தமான நகைக்கடன் நிறுவனத்தில் புகுந்த மர்ம நபர்கள், வங்கி ஊழியர்களை கட்டிப்போட்டு, ரூ.15 கோடி மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், 6 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்தக் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகனுக்கு உதவியதாக இருவரை போலீஸார் கைது செய்திருந்தனர். முருகனுக்கு நெருங்கிய வட்டாரத்தில் இருந்த சந்தோஷ் என்பவரிடமிருந்து 18 கிலோ தங்க நகைகளை போலீஸார் நேற்று மீட்டனர்.
இந்த நிலையில், இந்த கொள்ளைச் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான முருகனையும் போலீஸார் இன்று காலை கைது செய்தனர்.
இந்த வழக்கில் அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொள்ளையர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 18 கிலோ தங்க நகைகள் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட 18 கிலோ தங்க நகைகளை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் பார்வையிட்டார்.