Chennai private bank robbery CCTV clips released: சென்னை தனியார் வங்கி கொள்ளையில், முன்னாள் ஊழியரே கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ள் நிலையில், கொள்ளையர்கள் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என தமிழக டி.ஜி.பி அறிவித்துள்ளார்.
சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் பெடரல் தனியார் வங்கியின் தங்க நகை கடன் பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கடந்த ஆகஸ்ட் 13 தேதி பட்டப்பகலில் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், வங்கியின் காவலாளிக்கு மயக்க மருந்து கொடுத்து, வங்கிக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் வங்கி ஊழியர்களை கழிவறையில் கட்டிப்போட்டு, வங்கியில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இதையும் படியுங்கள்: கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவன்… முதலுதவி செய்து காப்பாற்றிய டிஜிபி
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதற்குள் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் சுமார் 32 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த வங்கியில் பணிபுரிந்த ஊழியரே தனது நண்பர்களுடன் இணைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து வங்கியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் தங்கள் விசாரணையை தொடங்கினர்.
அதன் அடிப்படையில், வங்கியின் முன்னாள் ஊழியர் முருகன் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து, இந்த துணிகர கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து வங்கி கொள்ளையர்கள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
மேலும், கொள்ளையர்களைப் பிடிக்கும் காவலர்களுக்கு ரூ. 1லட்சம் பரிசு வழங்கப்படும் என தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார்.
இதனிடையே தலைமறைவாக உள்ள முருகனை காவல்துறை தேடி வரும் நிலையில், அவரது உறவினர்கள் மற்றும் அவரது செல்போன் எண்ணில் அதிக முறை தொடர்பு கொண்டவர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், வங்கி மற்றும் வங்கிக்கு அருகில் உள்ள கடைகளில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளையும் காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். இதில் கொள்ளையர்கள் வந்துசெல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியானது.
கொள்ளையர்கள் குறித்த தகவல் வெளியானதால், அவர்கள் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ. 1லட்சம் பரிசு வழங்கப்படும் என தமிழக டி.ஜி.பி அறிவித்துள்ளார். மேலும், கொள்ளையர்கள் தப்பிச் செல்லாமல் இருக்க தமிழக முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே நகைகள் அனைத்தும் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும், நகைகள் மீட்கப்பட்டவுடன் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் என்றும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil