விழுப்புரம் மாவட்ட எல்லைப் பகுதியான ஓங்கூர் சுங்கச்சாவடி அருகே, சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் பழமையான ஆற்றுப்பாலம் பலவீனமான நிலையில் இருப்பதாக கடந்த 15 தினங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களின் வாயிலாக வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. சுமார் 30 ஆண்டுகள் பழமையான இந்தப் பாலத்தின் நடுவே, குறிப்பிட்டப் பகுதியில் ஏற்பட்ட பழுதால் வாகனங்கள் செல்லும்போது அந்தப் பாலம் அதிர்வுகளுடன் லேசாக ஊசலாடியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகி வந்தனர். இந்நிலையில், இந்தப் பாலத்தின் அருகே வேகத்தடுப்புகளை வைத்து பாலத்தை மெதுவாக கடந்து செல்லும்படி வாகன ஓட்டிகளிடம் போலிஸார் அறிவுறுத்தி வந்தனர். மேலும், பாலத்தின் கான்கிரீட் ஸ்லாப்களைத் தாங்கி நிற்கும் தூண்களுக்கு இடையே வைக்கப்படும் ஸ்ப்ரிங், பியரிங் பழுதாகி நழுவியிருப்பதாலே இத்தகு பிரச்னை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், கடந்த மாதம் 29-ம் தேதி நேரடி ஆய்வு மேற்கொண்டிருந்த மாவட்ட ஆட்சியர் மோகன், பாலத்தில் ஏற்பட்டுள்ள பழுதை விரைந்து முடிக்க உத்தவிட்டிருந்தார். அதனைத்தொடர்ந்து, பழுதுநீக்க பணிக்காக அந்த பாலத்தில் போக்குவரத்து முடக்கப்பட்டு, விழுப்புரம் – சென்னை மார்க்க பாலம் இருவழிப்பாதையாக மாற்றப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரில் இயல்பாகவே ஏற்பட்டதோடு, அங்கு வாகன விபத்துகள் நடைபெறுவதும் அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 3-ம் பொதுப்பணித்துறை (நெடுஞ்சாலைகள்) அமைச்சர் எ.வ.வேலு மற்றும் செஞ்சி மஸ்தான் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அங்கு ஆய்வு மேற்கொண்டு, பணியை துரிதப்படுத்த உத்தரவிட்டனர்.
நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், பாலத்தை சரிசெய்யும் பணி நடைபெற்று வரும் நிலையில்… சனி, ஞாயிறு, திங்கள் கிழமை என 3 நாட்கள் தொடர் விடுமுறை நாட்களையொட்டி, சென்னை வாசிகள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கினர். இருசக்கர வாகனம், கார், பேருந்து என வாகனங்கள் வரிசைக்கட்டியதால் இந்த நெடுஞ்சாலை பரபரப்பாகவே இருந்தது. இதனால், பாலம் பணி நடைபெறும் பகுதியில் சுமார் 2 கி.மீட்டருக்கு மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட தொடங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். நாளை (16.08.2022) பணி நாள் என்பதால், சொந்த ஊருக்கு வந்தவர்கள் இன்றைய தினம் மாலை முதல் அதீக அளவில் சென்னை நோக்கி செல்வார்கள்.
இதனால் வழக்கமாக ஏற்படும் நெரிசலை விட, பாலம் பழுது பணியால் அதிக அளவிலான வாகன நெரிசல் ஏற்படலாம் என கருதப்படுகிறது. எனவே, வாகன ஓட்டிகள் சிரமப்படாமல் செல்வதற்கு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது, மாற்று வழிகள் என்னென்ன என்பது குறித்து போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவரிடத்தில் பேசினோம். “மாற்று வழிகளை ஏற்பாடு செய்து வருகிறோம். திருச்சி – சென்னை செல்பவர்கள் ஓங்கூர் டோல்கேட்டிற்கு முன்பாகவே மாற்று வழியில் செல்வதற்கு இரண்டு வழிகளை சரிசெய்துக் கொண்டுள்ளோம். வாகன நெரிசல் அதிகமானால், அந்த பாதையின் வழியே வாகனங்களை திருப்பி விடுவோம். அதற்கான பணிகளில் தான் தற்போது ஈடுபட்டுள்ளோம்” என்றார்.
வாகன நெரிசலை தவிர்க்க மாற்று வழிகள் என்னென்ன?
திருச்சி மார்கத்தில் இருந்து சென்னை செல்பவர்கள்…
1). திண்டிவனம் கடந்து ஒலக்கூர் பகுதியில் இடப்புறமாக திரும்பி, நெடுங்கல் வழியாக சென்றால் வேலியம்பாக்கம் எனும் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் இணையலாம். இந்த பாதை சுலபமானது என கூறப்படுகிறது.
2). திண்டிவனம் கல்லூரி சாலை வழியாக வைரபுரம், ஒரத்தி, கடமலை புதூர் மேம்பாலம் சென்று தேசிய நெடுஞ்சாலையில் இணையலாம்.
3). திண்டிவனத்திற்கு முன்பாக கூட்டேரிப்பட்டில் இடப்புறமாக திரும்பி வெள்ளிமேடு பேட்டை, வந்தவாசி, உத்திரமேரூர் வழியாக சென்னை செல்லலாம்.
கூடுதலாக, திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் ஈ.சி.ஆர் சென்று அங்கிருந்து சென்னை செல்லலாம்.
திண்டிவனத்திலிருந்து மரக்காணம் சாலை வழியே சூனாம்பேடு சென்று அங்கிருந்து மதுராங்கம் சென்று சென்னை செல்லலாம்.
புதுச்சேரியில் இருந்து சென்னை செல்பவர்கள், ஈ.சி.ஆர் சாலையை பயன்படுத்துவதே சிறப்பானது என்கின்றனர் போலீஸ் அதிகாரிகள்.
பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வோம்..!