சென்னை: நாட்டின் 75-வது சுதந்திர தினத்தைமுன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு புனிதஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றிவைத்து, மரியாதை செலுத்துகிறார். மேலும், பல்வேறு விருதுகள், பதக்கங்களையும் அவர் வழங்குகிறார்.
முன்னதாக, இன்று காலை 8.35 மணிக்கு கோட்டை அருகில்வரும் முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலர் வெ.இறையன்பு வரவேற்று, காவல் துறை அதிகாரிகளை அறிமுகம் செய்துவைக்கிறார்.
தொடர்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிடும் முதல்வர் ஸ்டாலின், 9 மணிக்குகோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைக்கிறார். பின்னர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவுக்கு `தகைசால் தமிழர்’ விருது வழங்குகிறார். அதேபோல, அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லாவிருது, முதல்வரின் நல்லாளுமை விருதுகள், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பான சேவை புரிந்த மாவட்ட ஆட்சியர், மருத்துவர், நிறுவனங்களுக்கும் விருதுகளை வழங்குகிறார்.
மேலும், முதல்வரின் இளைஞர் விருதுகள், கரோனா தடுப்பு சிறப்பு பதக்கம், சிறந்த உள்ளாட்சி அமைப்புக்கான விருது, வீர தீர செயலுக்கான விருது உள்ளிட்டவற்றையும் முதல்வர் வழங்குகிறார்.
சுதந்திர தின விழாவைத் தொடர்ந்து, இன்று மாலை ஆளுநர் மாளிகையில் தமிழகஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர்விருந்து அளிக்கிறார். இதில்,முதல்வர் ஸ்டாலின் மற்றும்அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
முன்னதாக, எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் மகாத்மா காந்தியடிகளின் சிலையை முதல்வர் திறந்து வைக்கிறார். மேலும், இன்று இரவு மாநகராட்சி சார்பில் அடையார் கஸ்தூரிபாய் நகரில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவையும் முதல்வர் திறந்து வைக்கிறார். இதுதவிர, கலைவாணர் அரங்கில், செய்தித் துறை சார்பில், விடுதலைக்குப் பாடுபட்ட தேசத்தலைவர்களை சிறப்பிக்கும் வகையில் `விடுதலைப் போரில் வீரத் தமிழகம்’ என்ற பெயரில் முப்பரிமாண ஒளி-ஒலிக் காட்சி திறந்து வைக்கப்படுகிறது.