சென்னை அரும்பாக்கம், ரசாக் கார்டனில் உள்ள தனியார் வங்கிக் கிளையில் கடந்த 13-ம் தேதி பட்டப்பகலில் காவலாளிக்கு குளிர்பானம் கொடுத்தும், ஊழியர்களைக் கட்டிப்போட்டும் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பாக வங்கியின் கிளை மேலாளர் சுரேஷ் என்பவர் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வுசெய்தனர். இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் அன்பு, இணை கமிஷனர் ராஜேஸ்வரி, அண்ணாநகர் துணை கமிஷனர் விஜயகுமார் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீஸார், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து அரும்பாக்கம் போலீஸார் கூறுகையில், “வங்கிக் கிளையில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் சென்னை பாடியைச் சேர்ந்த முருகன் என்பவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. கொள்ளை நடந்த வங்கியின் இன்னொரு கிளை, வில்லிவாக்கத்தில் செயல்படுகிறது. அந்தக் கிளையில் அவர் மேலாளராக இருக்கிறார். அதனால் முருகனைத் தேடிவந்தோம். மேலும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது இரண்டு கார்கள், பைக்குகளில் வங்கிக்கு வரும் மர்மக் கும்பல், நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு, அவற்றை மூட்டையாகக் கட்டி எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
கார்களின் பதிவு நம்பர்கள், பைக்கின் பதிவு நம்பர்களைக் கொண்டு விசாரணை நடத்தி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைத் தேடிவந்தோம். அப்போது முருகனின் ஜிம் நண்பர்களுக்கும் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும் இந்தக் கொள்ளைக்கு மாஸ்டர் மைண்ட் முருகன் எனத் தெரியவந்தது. இதையடுத்து முருகன் மற்றும் அவரின் நண்பர்களின் செல்போன் நம்பர்களின் சிக்னலை ஆய்வுசெய்தோம். அதன் அடிப்படையில் முருகன், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பாலாஜி, சந்தோஷ் உட்பட நான்கு பேரைக் கைதுசெய்திருக்க்கிறோம். அவர்களிடமிருந்து 8 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், இரண்டு கார்கள், பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம். மீதமுள்ள நகைகளையும் கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களையும் தேடிவருகிறோம்” என்றனர்.
கொள்ளை தொடர்பாக கமிஷனர் சங்கர் ஜிவால், அரும்பாக்கம் காவல் நிலையத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ‘‘கடந்த 13.08.2022 அன்று மதியம் 2:30 மணியளவில் அரும்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரசாக் கார்டன் சாலையில் இயங்கிவரும் FED வங்கிக் கிளையில் கொள்ளை நடந்தது. வங்கி ஊழியர்களைக் கத்தியை காட்டி மிரட்டி, ஸ்ட்ராங்க் ரூம் சாவியைக் கொள்ளையர்கள் பறித்துள்ளனர். மேலும் வங்கி ஊழியர்களை ஓய்வு அறையில் அடைத்துவிட்டு, வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்திருந்த ரூ.15 கோடி மதிப்பிலான 31.7 கிலோ எடை கொண்ட தங்க நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு தப்பியுள்ளனர். கொள்ளைச் சம்பவத்தில் முருகன், சந்தோஷ், பாலாஜி, சூர்யா ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்த வங்கியில் முருகன், வேலை பார்த்தால் அவருக்கு வங்கி குறித்த முழு விவரமும் தெரிந்திருக்கிறது. அதனால் முருகன், தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து கடந்த 10 நாள்களாக திட்டம் தீட்டி இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார். சிசிடிவி கேமராவில் ஸ்பிரே அடித்து காட்சிகள் பதிவாகாமல் செய்துள்ளனர். இந்தக் கொள்ளை வழக்கில் இன்னும் சிலரைத் தேடிவருகிறோம். அவர்களிடமிருக்கும் மீதமுள்ள நகைகள் விரைவில் மீட்கப்படும்” என்றார்.
தனிப்படை போலீஸார் கூறுகையில், “இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட முருகன், சென்னை திருமங்கலத்தில் பதுங்கியிருந்தான். அவனைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறோம். அப்போது இந்தக் கொள்ளையில் முருகன், தன்னுடைய ஃபிரெண்ட்ஸ், உறவினர்களை ஈடுபடுத்தியது தெரியவந்திருக்கிறது. கொள்ளை நடந்த வங்கியின் கிளைகளில் அடமானம் வைக்கப்படும் அனைத்து நகைகளும் இங்குதான் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். இந்தத் தகவலைத் தெரிந்துகொண்ட முருகன், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது” என்றனர்.