புதுடெல்லி: நாட்டின் 76வது சுதந்திர தினத்தையொட்டி, சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் ஒரே ஒரு வாரிசான, ஜெர்மனியில் வசித்து வரும் அவரது மகள் அனிதா போஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சுதந்திரத்தின் மகிழ்ச்சியை அனுப்பவிப்பதற்கு எனது தந்தை வாழவில்லை. குறைந்தபட்சம் அவரது அஸ்தியாவது இந்திய மண்ணுக்கு கொண்டு வரவேண்டிய தருணம் இதுவாகும். 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி அவர் இறந்தது குறித்து இன்னும் சந்தேகம் இருப்பவர்களுக்கு டிஎன்ஏ சோதனை மூலம் பதில் அளிக்க முடியும். ஜப்பான் டோக்கியோவின் ரென்கோஜி கோயிலில் வைக்கப்பட்டு இருப்பது நேதாஜியின் அஸ்தி என்பதற்கான அறிவியல் ஆதாரத்தை டிஎன்ஏ சோதனை மூலம் பெற முடியும். அந்நிய ஆட்சி இல்லாத இந்தியாவில் வாழ்வதற்காக தான் அவர் ஏங்கினார். அவரது அஸ்தியையாவது இந்திய மண்ணுக்கு கொண்டு வர வேண்டிய நேரம் இதுவாகும்’ என்று தெரிவித்துள்ளார்.