தமிழகத்திற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய அளவில் பங்காற்றிய தலைவர்களை பெருமைப்படுத்தும் வகையில் “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருதை முதல்வர்
உருவாக்கி உத்தரவு பிறப்பித்திருந்தார். ஒவ்வொரு ஆண்டும் தகைசால் தமிழர் விருதுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு 10 லட்ச ரூபாய்க்கான காசோலை, பாராட்டு சான்றிதழ் ஆகியவை சுதந்திர தின விழாவின் போது முதல்வரால் வழங்கப்படும். அந்த வகையில் நடப்பாண்டிற்கான தகைசால் தமிழர் விருது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவிற்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 75வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றி வைத்து விருதுகளையும், நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது ஆர்.நல்லகண்ணுவிற்கு தகைசால் விருது வழங்கி முதல்வர் கவுரவித்தார். இதையடுத்து 10 லட்ச ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார். உடனே முதல்வர் அளித்த 10 லட்ச ரூபாய்க்கான காசோலை உடன் தனது பங்கிற்கு 5 ஆயிரம் ரூபாய் சேர்த்து மொத்தம் 10 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிவிட்டார். இந்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. முன்னதாக தனது கட்சி வழங்கிய ஒரு கோடி ரூபாயை அப்படியே திருப்பி கட்சிக்கு வழங்கி பெரிதும் ஆச்சரியம் அளித்தவர் ஆர்.நல்லகண்ணு என்பது குறிப்பிடத்தக்கது.