மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதா பிரபல தனியார் வங்கியில் உயர் அதிகாரியாக இருக்கிறார். கடந்த முறை மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியில் இருந்த போது மகாராஷ்டிரா அரசு ஊழியர்களின் சம்பள கணக்கை தான் வேலை செய்த வங்கியில் திறக்கவேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் சர்ச்சையும் ஏற்பட்டது. தற்போது மீண்டும் பட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்று இருக்கிறார். இது குறித்து அம்ருதா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், கூறியதாவது, “எனது கணவர் எப்போதும் வேலை செய்துகொண்டே இருப்பார். எங்களுக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது. மற்ற பொறுப்புக்களும் இருக்கிறது. நான் எனது வேலையையும் கவனித்துக்கொண்டு குடும்பத்தையும் கவனித்துக்கொள்கிறேன். நான் வங்கியில் பணியாற்றினாலும் எனது பொழுதுபோக்கான இசையை எப்போதும் புறக்கணித்தது கிடையாது. சமூக சேவையிலும் ஈடுபடுகிறேன். எங்களுக்கு இருக்கும் ஒரு மகளையும் கவனித்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. எனவே ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பது அவசியம் என்று நம்புகிறேன்.
நான் என்னுடைய வீடு மற்றும் வேலையில் கவனம் செலுத்துகிறேன். கிராம மேம்பாடு மற்றும் தெருவோர குழந்தைகளின் நலனில் பங்கெடுப்பதன் மூலம் சமுதாயத்தில் மாற்றத்தை கொண்டு வர முயற்சி செய்கிறேன். சமூக சேவையும் அரசியலில் ஒரு பங்குதான். எனது கணவர் மீண்டும் அதிகாரத்திற்கு வந்திருப்பதால் மும்பையில் நின்று போன வளர்ச்சித்திட்டங்கள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
முந்தைய அரசு உட்கட்சி பிரச்னையால் கவிழும் என்று தேவேந்திர பட்னாவிஸ் ஒரு முறை சொல்லி இருந்தார். அதன்படிதான் நடந்திருக்கிறது. சிவசேனா ஏற்கனவே பாஜகவுடன் தான் இருக்கிறது. எஞ்சியிருப்பது சிலபேர் மட்டுமே. அவர்களை பற்றி எனக்கு தெரியாது. ஆனால் அவர்களால் சேனாவை உருவாக்க முடியாது” என்று தெரிவித்தார்.
அம்ருதா நாக்பூர் அருகே ஒரு கிராமத்தையும் தத்து எடுத்துள்ளார். மாநில அளவிலான டென்னிஸ் வீராங்கணையான அம்ருதா ஒரு சிறந்த பயிற்சி பெற்ற பாடகியுமாவார்.