திருமாவளவனுக்கு நாளை மணி விழா – முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்!

விசிக தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவனின் 60வது பிறந்த நாள், நாளை மணி விழா என்ற பெயரில் கொண்டாடப்பட உள்ளது. இதில், தமிழக முதலமைச்சர் பங்கேற்க உள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன் பிறந்த நாளை கட்சி தொண்டர்கள் ஒவ்வொரு ஆண்டும் தமிழர் எழுச்சி நாளாக கொண்டாடி வருகின்றனர். நாளை மறுநாள் 17 ஆம் தேதி அவருக்கு 60வது பிறந்த நாளாகும்.

பிறந்த நாள் மணி விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் போன்றவை தமிழகம் முழுவதும் கட்சி தொண்டர்கள் மூலம் வழங்கப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நாளை (16 ஆம் தேதி) மணி விழா நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

மாலை 4 மணி அளவில் தொடங்கும் விழா நள்ளிரவு வாழ்த்துப் பொழிவு, கவிப்பொழிவு, இசைப் பொழிவு, கருத்துப் பொழிவு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. முதலில் நடைபெறும் வாழ்த்து பொழிவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ரா.நல்லகண்ணு தலைமை தாங்குகிறார். விசிக பொதுச் செயலாளர்கள் சிந்தனை செல்வன், துரை, ரவிக்குமார், எம்எல்ஏக்கள் எஸ்.எஸ். பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

முதன்மை செயலாளர்கள் ஏ.சி.பாவரசு, உஞ்சை அரசன், தலைைம நிலைய செயலாளர்கள் தகடூர் தமிழ்ச்செல்வன், பாலசிங்கம், இளஞ்சேகுவேரா ஆகியோர் வரவேற்கிறார்கள். திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

பின்னர், புதுவை சித்தனின் மக்கள் இசைக்குழு, ஜாகீன் உசேன் குழுவினரின் நடனம் ஆகியவை நடக்கின்றன. தொடர்ந்து அறுபது, எழுபதும் என்ற தலைப்பில் கவிப்பொழிவு கவிஞர் முத்துலிங்கம் தலைமையில் நடக்கிறது. கவியரங்கத்தை கவிஞர் வைரமுத்து தொடங்கி வைத்து பேசுகிறார். கவிஞர் கபிலன் சிறப்பு கவிதை வாசிக்கிறார்.

இதையடுத்து “சமத்துவம் உயர்த்துவோம்” என்ற தலைப்பில் கருத்து பொழிவு கல்கி பிரியன் தலைமையில் நடக்கிறது. இதில் கவிதா முரளிதரன், நாராயணன், எழுத்தாளர் மீனா கந்தசாமி ஆகியோர் பேசுகிறார்கள். “சங்கத்துவம் வீழ்த்துவோம்” என்ற தலைப்பில், திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் கருத்தரங்கம் நடக்கிறது. இதில் பத்திரிகையாளர்கள் ஆர்.மணி, பேராசிரியை பர்வீன் சுல்தானா, செந்தில்வேல் ஆகியோர் உரையாற்றுகிறார்கள்.

இந்த நிகழ்ச்சிகளை வன்னியரசு, எழில் கரோலின், கவுதம சன்னா, ரஜினிகாந்த், பூவிழியன், பாவலன், மாவட்ட செயலாளர்கள் செல்லதுரை, இரா.செல்வம், அம்பேத் வளவன், அன்பு செழியன், ரவிசங்கர், ஆதவன் ஆகியோர் ஒருங்கிணைக்கிறார்கள். தொல்.திருமாவளவனின் மணி விழாவில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் சென்னையில் குவிந்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.