நீதிபதியின் பாதுகாப்புக்காக குற்றாலம் வந்திருந்த இடத்தில், சென்னைமாநகர ஆயுதப்படை உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்தவர் பார்த்திபன் (50). இவர், சென்னை மாநகர ஆயுதப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரனுக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்தார்.
நீதிபதி ராஜேஸ்வரன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக தென்காசி மாவட்டம், குற்றாலத்துக்கு வந்திருந்தார். அவருடன் பாதுகாப்பு அதிகாரி பார்த்திபனும் வந்திருந்தார். இவர்கள், பழைய குற்றாலத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தனர்.
இந்நிலையில், பார்த்திபன் தங்கியிருந்த அறையில் இருந்து நேற்று அதிகாலையில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டுள்ளது. விடுதி ஊழியர்கள் விரைந்து சென்று பார்த்தனர். அறைக் கதவை நீண்ட நேரம் தட்டியும் பார்த்திபன் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு, பார்த்திபன்தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் தனது நெஞ்சில் சுட்டுக்கொண்டு, ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சிஅடைந்தனர்.
தென்காசி டிஎஸ்பி மணிமாறன் மற்றும் போலீஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது. தற்கொலை செய்துகொண்ட பார்த்திபனுக்கு தீபா (47) என்ற மனைவியும், யுவராஜ்(17) என்ற மகனும், கேசிகா (12) என்ற மகளும் உள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் செந்தில்குமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில், சிறப்பு உதவிஆய்வாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்திருப்பது காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையில் பெரும்பாலானோர் பணிச்சுமை, மன அழுத்தத்துடன் இருப்பதாகவும், இதற்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.