நாட்டின் 75-வது சுதந்திர தினம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பா.ஜ.க மகளிர் அணி சார்பில் நேற்று சுதந்திர தின வந்தே மாதரம் பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.கவைச் சேர்ந்த எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். கோத்தகிரிக்கு வருகை தந்த அவருக்கு படுகர் இன மக்களின் பாரம்பர்ய உடையை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து படுகர் இன பெண்களுடன் நடனமாடினார்.
பேரணியில் கலந்து கொண்டு பேசிய எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “நாட்டின் 75- வது சுதந்திர தினம் திருவிழாவைப் போல கொண்டாடப்பட்டு வருகிறது. மற்ற கட்சிகளைப் போல கட்சியில் இருக்கும் நிர்வாகிகளை துதி பாடும் இயக்கம் பா.ஜ.க கிடையாது. எங்களுக்கு தேசம் தான் முக்கியம். மக்களிடம் நாட்டுப்பற்றை வளர்க்கும் கட்சியாக எங்கள் கட்சி இருந்து வருகிறது. மக்களின் வரிப்பணம் வீணாக கூடாது என்ற நோக்கில் நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை சீர்திருத்தம் செய்யும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
ஜி.எஸ்.டியை பொறுத்தவரை மத்திய அரசு மட்டும் முடிவு செய்வதில்லை. கவுன்சில் இருக்கிறது. மாநில அரசுகள் ஒத்துழைத்தால் மட்டுமே ஜி.எஸ்.டி வரியில் மாற்றம் கொண்டுவர முடியும். இலவச மின்சாரம் வழங்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு. யாருக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்ற வழிகாட்டு முறையை மத்திய அரசு வழங்குகிறது” என்றார்.