பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி, குருபூஜை ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அந்தவகையில், 115ஆவது ஜெயந்தி மற்றும் 60ஆவது குறுபூஜையை சிறப்பாக கொண்டாட தேவர் நினைவிட பொறுப்பாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.
அதிமுகவின் முக்கிய வாக்குவங்கியாக இருக்கும் முக்குலத்தோர் சமூக மக்களை குளிர்விக்கும் பொருட்டு, 13 கிலோ எடையுள்ள தங்கக்கவசத்தை பிரத்யேகமாக செய்ய சொல்லி, பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு ஜெயலலிதா வழங்கினார். தவறாமல், குருபூஜைக்கும் அவர் சென்று வந்தார். தேவர் ஜெயந்தி சமயத்தில் கடிதம் வழங்கி மதுரையில் உள்ள பாங்க் ஆஃப் இந்தியா கிளையின் லாக்கரில் இருந்து தங்கக்கவசத்தை அதிமுக பொருளாளராக இருக்கும்
எடுத்து அளிப்பார். விழா முடிந்ததும் மீண்டும் பாதுகாப்பாக லாக்கரில் அது வைக்கப்படும். இந்த லாக்கரின் சாவி அதிமுக பொருளாளர் மற்றும் தேவர் நினைவிட பொறுப்பார்களிடம் இருக்கும்.
இது தொடர்பாக ஜெயலலிதா இருக்கும் போதே, ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்படி, அதிமுக பொருளாளரும், தேவர் நினைவிட பொறுப்பாளர்களில் ஒருவரும் இணைந்து தங்கக்கவசத்தை எடுத்து கொடுப்பதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இதனிடையே,
தரப்பில் கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி நீக்கப்பட்டு, ஓபிஎஸ் வகித்து வந்த பொருளாளர் பதவியும் பறிக்கப்பட்டு கட்சியை விட்டே நீக்கப்பட்டார். பொருளாளர் பதவி திண்டுக்கல் சீனிவாசனிடம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து ஓபிஎஸ் நீக்கியுள்ளார். இதுதொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, தங்கக் கவசத்தை யார் பெறுவது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறுகையில், “ஆண்டுதோறும் பொருளாளர் என்ற முறையில் கவசத்தை ஓபிஎஸ் எடுத்துக் கொடுத்து வந்தார். தற்போது, அவர் நீக்கப்பட்டு திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாளரே கவசத்தை எடுக்க முடியும் என்பதால், திண்டுக்கல் சீனிவாசன் தங்கக்கவசத்தை எடுத்து கொடுப்பதில் எந்த சிக்கலும் இல்லை. ஏற்கனவே சில வங்கிகள் திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராக ஏற்றுக் கொண்டுள்ளதால் எந்த சிக்கலும் இல்லை. இந்த முறையும் தலைமை கழகத்தில் இருந்து திண்டுக்கல் சீனிவாசனுக்கு கடிதம் அளிக்கப்பட்டு அதனடிப்படையில், வங்கியில் இருந்து கவசம் எடுக்கப்படும்.” என்றனர்.
இது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பில் கூறுகையில், “கட்சியின் பொருளாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்ஸே தொடர்கிறார். எனவே, வழக்கம் போல் இந்த முறையும் வங்கியில் கடிதம் அளித்து ஓபிஎஸ்ஸே கவசத்தை பெறுவார்.” என்கின்றனர் நம்பிக்கையுடன்.
தங்கக்கவசத்தை எடுக்கும் சர்ச்சை இதற்கு முன்பு கடந்த 2017ஆம் ஆண்டும் நடந்துள்ளது. அப்போது, எடப்பாடி அணி, சசிகலா அணி என்று இரண்டு பிரிவாக அதிமுக இருந்தது. எடப்பாடி தரப்பில், அப்போது துணை முதல்வராக இருந்தவரும், அதிமுக பொருளாளருமான ஓபிஎஸ் தலைமையில் தங்கக்கவசத்தை எடுக்க சென்றனர். அந்த சமயத்தில், சசிகலா சார்பாக டிடிவி தினகரன் தரப்பிலும் சிலர் வந்து தங்கக்கவசத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். கடும் வாக்குவாதத்திற்கு பிறகு, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் தங்கக்கவசத்தை வங்கி அதிகாரிகள் ஒப்படைத்தனர். பின்னர், ராமநாதபுரம் ஆட்சியர் மூலம் தேவர் நினைவிட பொறுப்பாளர்களிடம் கவசம் ஒப்படைக்கப்பட்டது.
இரு தரப்பினரும் கவசம் தேவர் நினைவிடம் செல்ல எந்த பிரச்சினையும் இல்லாமல் வழிவகை செய்தனர். அதேபோல், இந்த முறையும் எந்த பிரச்சினையும் இன்றி தங்கக்கவசம் தேவர் நினைவிடம் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என தேவர் நினைவிட பொறுப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.