மும்பை : 2022 ம் ஆண்டு பாலிவுட்டிற்கு மோசமான ஆண்டு என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு பாரபட்சமின்றி யாருடைய படம் ரிலீசானாலும் ஃபிளாப் ஆகி, வசூலில் அடி மேல் அடி வாங்கி வருகின்றன.
அதிலும் பாலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அக்ஷய் குமாரின் படங்கள் அனைத்தும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. ஆனால் அனைத்து படங்களும் வரிசையாக தோல்வியை சந்தித்து வருகின்றன.
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை அக்ஷய் குமார் நடித்த 3 படங்கள் ரிலீசாகி உள்ளது. பச்சன் பாண்டே, சாம்ராட் ப்ருத்விராஜ் படங்கள் தான் மிக குறைவான வசூலை பெற்று, தோல்வியை சந்தித்தன என்று பார்த்தால், கடந்த வாரம் ரிலீசான ரக்ஷாபந்தன் படம் பச்சன் பாண்டே மற்றும் சாம்ராஜ் ப்ருத்விராஜ் படங்களை விட குறைவான வசூலையே பெற்றுள்ளது.
இரட்டை குடியுரிமை சர்ச்சையில் அக்ஷய்
படங்கள் தான் தோல்வி அடைகின்றன என்றால், பல்வேறு சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறார் அக்ஷய் குமார். நடிகர் அக்ஷய் குமார் இந்தியா, கனடா என இரண்டு நாடுகளின் குடியுரிமையையும் பெற்றவர்.அவர் கனடா நாட்டு குடியுரிமை வைத்திருப்பதை குறிப்பிட்டு கடந்த சில நாட்களாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
நான் இந்தியனாக இருப்பதில் என்ன பிரச்சனை?
இது பற்றி சமீபத்தில் பிரஸ்மீட் ஒன்றில் பதிலளித்த அக்ஷய் குமார், நான் இந்தியனாக இருப்பதில் நாட்டில் உள்ள யாருக்காவது எந்த பிரச்சனையாவது உள்ளதா? கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எனது படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. கிட்டத்தட்ட 14 – 15 படங்கள் ஓடவில்லை. அதனால் வேறு எங்காவது சென்று, வேறு வேலை ஏதாவது பார்க்கலாமா என நினைத்தேன்.
நாட்டை விட்டு செல்ல நினைத்தேன்
பலரும் வேலைக்காக பல நாடுகளுக்கும் சென்று வருகின்றனர். ஆனால் அவர்கள் தற்போது வரை இந்தியர்கள் தான். அதனால் இந்த சூழல் சரியாக ஒத்துழைக்காததால் வேறு இடத்திற்கும், வேறு தொழிலுக்கும் மாற நினைத்தேன். அதனால் கனடா குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்தேன். குடியுரிமையும் பெற்றேன் என்றார்.
என்னிடம் பாஸ்போர்ட் உண்டு
ஆனால் அதிர்ஷ்டவசமாக அதற்கு பிறகு அக்ஷய் குமார் நடித்த படங்கள் நன்றாக போக துவங்கின. இதனால் வெளிநாட்டிற்கு போகும் எண்ணத்தை கை விட்டார் அக்ஷய். ஆனால் அவரிடம் தற்போதும் கனடா பாஸ்போர்ட் உள்ளது. அவர் பேட்டியில் குறிப்பிடுகையில், என்னிடம் பாஸ்போர்ட் உள்ளது. பாஸ்போர்ட் என்பது என்ன? ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு பயணம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் ஆவணம்.
நான் வரி கட்டுகிறேன்
நான் இந்தியன். நான் எனக்கான அனைத்து வரிகளையும் கட்டுகிறேன். இங்கு தான் வரி கட்டிக் கொண்டிருக்கிறேன். இங்கு தான் சம்பாதிக்கிறேன். எனக்கு இன்னொரு நாட்டிலும் வரி செலுத்தும், வசிக்கும் சாய்ஸ் உள்ளது. ஆனால் நான் என்னுடைய நாட்டில் தான் வரி செலுத்திக் கொண்டிருக்கிறேன்.எனது நாட்டில் தான் வேலை செய்கிறேன்.
நான் இந்தியன் தான்
ஏராளமான மக்கள் என்னவெல்லாமோ சொல்கிறார்கள். அவர்களுக்கு அனுமதி உண்டு. அவர்கள் அனைவருக்கும் சொல்கிறேன் நான் இந்தியன். நான் எப்பவுமே இந்தியன் தான் என திட்டவட்டமாக பதிலளித்தார்.