நாக்பூர் :”பல்வேறு போராட்டங்களுக்கு பின் சுதந்திரம் பெற்ற நம் நாடு சுயசார்புடன் இருக்க வேண்டியது அவசியம்,” என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார். மஹாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய மோகன் பாகவத் பேசியதாவது:இன்றைய தினம் இந்தியர்களாகிய நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய தினம்; உறுதிமொழி ஏற்க வேண்டிய தினம்.
பல்வேறு போராட்டங்களுக்கு பின் நாம் சுதந்திரம் பெற்றுள்ளோம். எனவே, நாம் சுயசார்புடன் இருக்க வேண்டியது அவசியம். சுதந்திரமாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் அனைத்திலும் சுயசார்பு உடையவர்களாக மாற வேண்டும்.
உலகத்துடன் உறவுகளை நாம் பேண வேண்டும்.
ஆனால், அது நம் சொந்த விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அதற்கு திறன் வாய்ந்தவர்களாக நம்மை தயார்
படுத்திக் கொள்ள வேண்டும். உலக அரங்கில் மிகப்பெரிய நாடாக மாறும் போது நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை மூவர்ண கொடி நமக்கு உணர்த்துகிறது. மற்றவர்களை நாம் ஆட்சி செய்ய விரும்பாமல், உலகம் முழுதும் அன்பை பரப்புவதுடன், உலக நன்மைக்காக தியாகங்கள் செய்ய வேண்டும்.வருங்காலத்தில் அப்படிப்பட்ட நாடாக நாம் உருவாகும் வரை, இந்த நாடு நமக்கு என்ன கொடுத்தது என மக்கள் நினைக்க கூடாது; நாட்டுக்கு நாம் என்ன கொடுக்கிறோம் என்பதை பார்க்க வேண்டும்.நாம் அனைவரும் இந்த உறுதிமொழிக்கு ஏற்ப வாழும் நாளில், இந்த உலகமே நம்மை வியப்புடன் பார்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை.இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement