கர்நாடக மாநிலத்தில் விமானத்தில் பயணம் இருந்த ஒருவர் தனது சக பயணிக்கு “நீ வெடிகுண்டு வைப்பவன் அல்லவா” என்று கிண்டலாக வந்த மெசேஜைப் பார்த்து அதிர்ச்சியடைந்து விமானத்தை நிறுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மும்பை நோக்கி நேற்று காலை 11 மணியளவில் பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்த இண்டிகோ விமானம் திடீரென நிறுத்தப்பட்டது. விமானத்தில் இருந்து அனைத்து பயணிகளும் வெளியேற்றப்பட்டு விமானமும், பயணிகளின் உடைமைகளையும் விமான நிலைய அதிகாரிகள் தீவிரமாக சோதனையிட துவங்கினர்.
அந்த விமானத்தில் பயணம் செய்த இருந்த பயணி ஒருவருக்கு அவரது பெண் நண்பர் அனுப்பிய ஒரு மெசேஜ்தான் புறப்பட தயாராக இருந்த விமானத்தை நிறுத்துவதற்கும் அதன் பின் நடந்த தீவிர சோதனைக்கும் காரணமாக அமைந்துள்ளது. அந்த விமானத்தின் 13A இருக்கையில் அமர்ந்திருந்த பயணி பெங்களூரு விமான நிலையத்தில் விமானத்திற்காக காத்துக் கொண்டிருந்த தனது பெண் நண்பருடன் மொபைல் ஃபோனில் “சாட்” செய்து இருக்கிறார்.
இவர்கள் இடையே நடைபெற்று கொண்டிருந்த உரையாடலை இருக்கை எண் 14B இல் இருந்த பயணி கவனித்துள்ளார். அப்போது பெண் நண்பரிடம் இருந்து 13A இல் இருந்த பயணிக்கு “நீ வெடிகுண்டு வைப்பவன் அல்லவா!” (U r da bomber) என்று மெசேஜ் வந்ததையும் சக பயணி பார்த்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர் பதறிப் போய் விமானத்தில் இருந்த ஊழியர்களிடம் இந்த மெசேஜ் பற்றிய தகவலை தெரிவித்துள்ளார்.
உடனடியாக விமானப் புறப்பாட்டை தள்ளி வைத்த அவர்கள், அனைத்து பயணிகளையும் விமானத்தில் இருந்து வெளியேற அறிவுறுத்தினர். அதன்பின் நடைபெற்ற சோதனையில் விமானத்திலும் பயணிகள் உடைமைகளிலும் எந்த விதமான வெடிகுண்டுகளோ அல்லது ஆபத்தான பொருட்களோ இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து இந்த அனைத்து பிரச்னைக்கும் காரணமான பயணியிடம் விசாரித்தபோது “நாங்கள் வேடிக்கைக்காக அவ்வாறு பேசிக் கொண்டிருந்தோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஆறு மணி நேரம் தாமதமாக மாலை 5 மணிக்கு 185 பயணிகளுடன் மும்பைக்கு விமானம் புறப்பட்டு சென்றது. வெடிகுண்டு பற்றி மெசேஜில் உரையாடிக் கொண்டிருந்த அந்த பயணியின் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 505 1B (பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல்) இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM