சென்னை: அரும்பாக்கம் பிரதான சாலையில் பட்டப்பகலில் நடைபெற்ற வங்கிக்கொள்ளை, தமிழக அரசு மற்றும் காவல்துறையினரின் மீது கடுமையான விமர்சனங் களை ஏற்படுத்திய நிலையில், வங்கிக்கொள்ளை தொடர்பாக முக்கிய குற்றவாளி முருகன் என்பதை காவல்துறை கைது செய்துள்ளது.
சென்னையில் அரும்பாக்கம் 100 அடி சாலையில் பெடரல் வங்கி செயல்பட்டு வருகிறது. நேற்றைய தினம் இந்த வங்கியில் கொள்ளை சம்பவம் அரங்கேறியது. முகமூடி அணிந்த ஒரு கும்பல் பட்டப்பகலிலேயே வங்கிக்குள் நுழைந்து, அனைவரையும் கட்டிப்போட்டு, கத்திமுறையில் சுமார் 32 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
மாநில தலைநகரிலேயே இப்படிப்பட்ட கொள்ளை சம்பவம் பட்டப்பகலில் அரங்கேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், தமிழககாவல்துறையினரையும், தமிழகஅரசின் நடவடிக்கையையும் கடுமையாக விமர்சித்தனர்.
இதையடுத்து, வீறுகொண்டெழுந்த காவல்துறை தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தது. முதல்கட்டமாக வங்கியில் பணிபுரந்த முன்னாள் ஊழியர் ஒருவர் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. அதையடுத்து, அவரை சுற்றி வளைத்த காவல்துறையினர், மற்றவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டுவந்தனர்.
வங்கிக்கொள்ளை தொடர்பாக 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது 4வது குற்றவாளியும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இநத் கொள்ளையின் முக்கிய நபரான முருகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காவல்துறையின் மீதான கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து, சுமார் 72 மணி நேரத்தில் 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.