புதுடில்லி : பாலியல் பலாத்கார வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர் தன் மீது தொடர்ந்துள்ள மோசடி வழக்கை புதுடில்லி நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, உத்தர பிரதேசத்தின் உனாவைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் மனு தாக்கல் செய்துள்ளார்.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள உனாவைச் சேர்ந்த, 17 வயது சிறுமி ஒருவர், 2017ல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
கொந்தளிப்பு
இதில், பா.ஜ.,வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,வாக இருந்த குல்தீப் சிங் சென்கர் உள்ளிட்டோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதற்கிடையே, அந்தச் சிறுமியின் தந்தை மீது, எதிர்தரப்பினர் சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் விசாரணையின்போது அந்தச் சிறுமியின் தந்தை உயிரிழந்தார்.பாலியல் பலாத்கார வழக்கில் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அந்தச் சிறுமி, முதல்வரின் வீட்டின் முன் தீக்குளித்தார். காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.இந்த சம்பவம் நாடு முழுதும் பெரும் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.அந்தச் சிறுமி எழுதிய கடிதத்தையடுத்து, உனாவ் நீதிமன்றத்தில் இருந்த பாலியல் பலாத்கார வழக்கை, புதுடில்லி நீதிமன்றத்துக்கு மாற்றி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.இந்த வழக்கை, 45 நாட்களுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்கும்படியும் உத்தரவிடப்பட்டது.
மனு தாக்கல்
இதன்படி விசாரணை நடத்திய புதுடில்லி நீதிமன்றம், எம்.எல்.ஏ.,வாக இருந்த குல்தீப் சிங் சென்கரை குற்றவாளியாக அறிவித்து, சாகும் வரை ஆயுள் தண்டனை அனுபவிக்கும்படி, 2019ல் தீர்ப்பு வழங்கியது. மேலும், 25 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.இதற்கிடையே, பாலியல் பலாத்கார வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சுபம் சிங் என்பவரின் தந்தை, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு எதிராக, உனாவில் வழக்கு தொடர்ந்தார். மோசடி செய்ததாக, பணம் பறிக்க முயன்றதாக தொடரப்பட்ட அந்த வழக்கில், பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு எதிராக, பிடிவாரன்ட் பிறப்பித்து உனா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, பழி வாங்கும் நோக்கத்தில் அந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக, பாதிக்கப்பட்ட சிறுமி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கையும், புதுடில்லி நீதிமன்றத்துக்கு மாற்றி விசாரிக்க உத்தரவிடும்படி அதில் கோரப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement