சண்டிகர் : ‘ஹரியானா எம்.எல்.ஏ.,க்களுக்கு பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த கும்பல், பாகிஸ்தானுக்கு 2.7 கோடி ரூபாய் அனுப்பிய தகவல் தெரிய வந்துள்ளது’ என, போலீசார் தெரிவித்தனர்.ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில், கடந்த சில மாதங்களாக முக்கிய பிரமுகர்களுக்கு, பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்து தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. சிலர் உயிருக்கு பயந்து பணம் கொடுத்துஉள்ளனர். சிலர் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து, விசாரணையில் இறங்கிய போலீசார், பீஹாரைச் சேர்ந்த ஆறு பேரை கைது செய்தனர்.இது குறித்து, ஹரியானா போலீசின் சிறப்பு அதிரடிப் படை அதிகாரி சந்தீப் தன்கர் கூறியதாவது:கைது செய்யப்பட்ட ஆறு பேருக்கும் பாகிஸ்தான் மற்றும் மேற்கு ஆசிய நாடுகளுடன் தொடர்பு இருக்கிறது. இவர்கள், மிரட்டி பெற்ற பணத்தை லாட்டரி அல்லது ‘கோன் பனேகா க்ரோர்பதி’ நிகழ்ச்சி போன்றவற்றில் பெற்றதாக மற்றவர்களை நம்ப வைத்துள்ளனர். பஞ்சாப் பாடகர் மூசேவாலாவின் கொலையிலும் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறது.
மற்றவர்களை மிரட்டும்போது, ‘மூசேவாலாவின் கதி தான் உங்களுக்கும்’ என தெரிவித்து உள்ளனர். மேலும், சட்டவிரோத பணப் பரிமாற்றத்துக்காக 727 வங்கிக் கணக்குகளை பயன்படுத்தி, கடந்த எட்டு மாதங்களில் பாகிஸ்தானுக்கு 2.7 கோடி ரூபாய் அனுப்பியுள்ளனர். இவர்களுடைய மற்ற தொடர்புகள் பற்றி விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement