“செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் மோடியின் படம் போடாததற்கு சீமான் கோவப்பட்டதன் மூலம், பாஜக-வின் பி டீம் என்பது வெளிப்படையாக நிரூபணமாகியிருக்கிறது என சிலர் உங்களை விமர்சனம் செய்கிறார்களே?”
“என்னைப் பார்த்து பயப்படுவதால்தான் அப்படி விமர்சனம் செய்கிறார்களே தவிர அது உண்மையல்ல. நான் எதற்காகப் பேசுகிறேன் என்பது புரியாதவர்களாக இருந்தால், மனநலக் காப்பகத்தில் சேர்க்க வேண்டுமே தவிர, சட்டமன்றம், பாராளுமன்றத்துக்கு அனுப்புவது தவறு. நாங்கள் எந்த இடத்திலும் பாஜகவை ஆதரித்ததில்லை. எங்களை பாஜகவின் பி டீம் என்று சொல்லி, சிறுபான்மையினரின் வாக்குகளை திமுகதான் அறுவடை செய்துகொண்டது. ஆனால், ஆட்சிக்கு வந்தபிறகு பசுமடம் ஆரம்பிப்பதில் தொடங்கி பாஜக ஆட்சி செய்வது மாதிரியே திமுக ஆட்சி நடத்துகிறது. தவிர, சட்டமன்றத்தில் அவர்களின் அப்பாவின் படத்தைத் திறப்பதற்கு அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரான ராம்நாத் கோவிந்தை ஏன் கூப்பிடவேண்டும். அப்பாவின் சிலையைத் திறக்க ஏன் வெங்கைய நாயுடுவைக் கூப்பிடவேண்டும்? கேட்டால் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி என காரணம் சொல்கிறார்கள்…ஆனால், எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டும் காங்கிரஸ் தலைவர்களை அழைத்துவிட்டு, ஆளும் கட்சியான பிறகு மட்டும் ஏன் இவர்களை அழைக்கவேண்டும். பாஜக ஆள்கிற மாநிலங்களில்கூட நலத்திட்டங்களைத் தொடங்க பிரதமரை அழைப்பதில்லை?..,ஆனால், திமுகவினர் அழைக்கிறார்கள்”
“நீங்கள் சொல்வதைப்போல ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால், நீங்களும் பிரதமரை அழைக்கவேண்டிய நிர்பந்தம் வரும்தானே?”
“எனக்கு அந்த அவசியம் இல்லை. ஏன்?..,சந்திரசேகர ராவ், மம்தா பானர்ஜி, பினராயி விஜயன் எல்லாம் நிர்வாகம் செய்யாமல் இருக்கிறார்களா… அவர்கள் யாரும் இவர்களைப் போல நடந்துகொள்வதில்லையே?”
“மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களுடன் இணக்கமாக இருந்தால் மாநிலத்துக்குத் தேவையான விஷயங்களைச் சாதித்துக்கொள்ள முடியும்தானே?”
“எதற்காக இணக்கமாக இருக்கவேண்டும். எங்களுக்கு என்ன திருமணமா நடந்திருக்கிறது. மாநில அரசுகளைச் சார்ந்துதான் ஒன்றிய அரசு இருக்கிறது. பிறகு ஏன் அவர்களைப்போய் நயந்துகொண்டிருக்க வேண்டும். இந்தியாவின் வருமானத்தை நிறைக்கிறதே நான்கு மாநிலங்கள்தான். அதில் தமிழ்நாடும் ஒன்று. எங்கள் காசை வைத்துக்கொண்டுதான் ஆட்சி நடத்தி வருகிறார்கள். நான் ஒரு ரூபாய் வரியாகக் கொடுத்தால் நாற்பது பைசா திருப்பிக் கிடைக்கிறது. வட இந்திய மாநிலங்கள் ஒரு ரூபாய் கொடுத்தால் மூன்று ரூபாய் திருப்பிக் கிடைக்கிறது. அதை எதிர்த்து சண்டையிடாமல் எதற்காக இணக்கமாகப் போகவேண்டும்?”
“வளர்ந்த மாநிலங்களின் நிதியை வைத்து பின்தங்கிய மாநிலங்களுக்குப் பயன்படுத்திவதில் என்ன தவறிருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?”
“அப்படியென்றால் காவிரியில், முல்லைப்பெரியாரில் எங்களுக்கான நீரை ஏன் சரியாகப் பங்கிட்டுட்டுத் தரமுடியவில்லை. என்னுடைய பழுப்பு நிலக்கரி மின்சாரத்தை பங்கிட்டுக் கொடுப்பவர்கள், ஏன் இவற்றையெல்லாம் பங்கிட்டுத் தரமுடியவில்லை… தமிழ்நாட்டில் என் பிள்ளைகள் நீட் தேர்வுக்குப் போகும்போது தோடு, மூக்குத்தியைக் கூட் கழற்றச் சொல்கிறார்கள். ஆனால், வட இந்தியாவில் எப்படி நீட் தேர்வு எழுதுகிறார்கள் என்று இணையத்தில் காணொலிகள் கிடைக்கிறது பாருங்கள்.”
“முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைப்பதை சூழலியல் சார்ந்து எதிர்க்கிறீர்களா, இல்லை அரசியலுக்காக எதிர்க்கிறீர்களா?”
“இரண்டும்தான். எதற்கு கடலுக்குள் போய் வைக்கவேண்டும். அதுவும் 134 அடி…வள்ளுவர் சிலையைவிட ஒரு அடி அதிகமாக ஏன்?..,நான் ஆட்சிக்கு வந்து 1333 அடியில் வைத்தால், இவர்கள் என்ன செய்வார்கள், அதற்குமேல் ஒரு அடி வைப்பார்களா?…134 அடி எதற்காக வைக்கவேண்டும், அதுமட்டுமில்லாமல் அவ்வளவு கோடியை எதற்கு இதற்காகச் செலவழிக்கவேண்டும்”
`தமிழகத்தில் திரைத்துறை சார்ந்து நடைபெற்ற ரெய்டுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?”
“தேர்தல் நெருங்க, நெருங்க இதுமாதிரியான வேலைகள் அடிக்கடி நடக்கும். அவர்களை அச்சுறுத்தி தங்கள் பக்கம் இழுப்பதற்கான வேலைதான் இது. காங்கிரஸ் ஆட்சியிலும் இது நடந்திருக்கிறது”
“உங்கள் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த கல்யாணசுந்தரம் நமது அம்மா இதழுக்கு ஆசிரியராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”
“அவர் பேராசிரியர் பணி செய்தவர். அவரிடம் அதற்கான ஆற்றல் இருக்கிறது. அவர் திறமைக்கு இது சாதாரணம்தான்”
“ ஏழு பேர் விடுதலைக்காக தொடர்ச்சியாகக் குரலெழுப்பி வந்தீர்கள்… தற்போது ஆறுபேர் விடுதலைக்கு என்ன மாதிரியான முன்னெடுப்புகளைச் செய்கிறீர்கள்?”
“பேரறிவாளனுக்கு கொடுத்த தீர்ப்பே மற்ற ஆறு பேருக்கும் பொருந்தும் என நீதிபதி தாமஸ் ஐயா கூறியிருக்கிறார். அதை முன்வைத்துதான் சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது எழுவர் விடுதலையைப் பற்றிப் பேசினார்கள். இப்போதும் எதுவும் பேசாமல் அமைதியாக காலம் கடத்துகிறார்கள்.”
“கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக வளர்ந்துவிட்டதாக ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறதே…அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”
“அப்படிக் கட்டமைக்கிறார்கள். மேலே முழு அதிகாரம் இருப்பதால் மாநிலத்திலும் அதைக் கட்டமைக்க முயற்சி செய்கிறார்கள்.”
“சீமானிடம் தொடர்ச்சியாக அவரின் மின் இணைப்பு எண்ணைக் கேட்டேன் அவர் கொடுக்கவில்லை, அவர் வீட்டிலிருந்து எந்தப் புகாரும் கொடுக்கப்படவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருக்கிறாரே?”
“தம்பி செந்தில்பாலாஜி என் அன்புக்குரியவர். அவரை மிக நீண்ட நாள்களாக அவரைத் தெரியும். நானும் அவரும் ஒருவருக்கொருவர் அன்பும் பாசமாகவும் இருப்போம். நான் மக்களுக்காகத்தான் கேட்டேனேதவிர என் வீட்டுக்காக கேட்கவில்லை. அதனால்தான் அனுப்பவில்லை”