மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அன்புச்செழியன். இவர் கோபுரம் பிலிம்ஸ் எனும் சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். சினிமாவுக்கு ஃபைனான்ஸ் செய்வது உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தாலும், ஃபைனான்ஸ்தான் இவரது பிரதான தொழில். ஒரு மணி நேரத்தில் ரூ.10 கோடியை உடனே கொடுக்கும் வல்லமை படைத்தவர் என்று இவர் குறித்து பேசப்படும் போதெல்லாம் சொல்லப்படும். அதேசமயம், வட்டி பணத்தை வசூல் செய்வதில் கறாராக செயல்படும் இவர், அதற்காக கட்டப்பஞ்சாயத்துகளிலும் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
ஆனாலும், இவர் மீது பெரிதாக எவ்வித நடவடிக்கையும் இதுவரை பாய்ந்ததில்லை. காரணம், அரசியல்வாதிகளிடம் உள்ள செல்வாக்கு மற்றும் அவர்களது கோடிக்கணக்கான ரூபாய் பணமும் அன்புசெழியனிடம் சுழன்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அன்புச்செழியன், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல் ராஜா, சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், வேலூர் திரைப்பட விநியோகஸ்தர் சீனிவாசன் உள்ளிட்டவர்களின் வீடுகளில் அண்மையில் வருமான வரித்துறை சோதனை நடந்தது.
சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவில் உள்ள அன்புச்செழியனின் வீடு, தியாகராய நகர் ராகவய்யா தெருவில் உள்ள அவரது அலுவலகம், மதுரை காமராஜர்புரத்தில் உள்ள வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் 4 நாட்களாக சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின்போது, அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகங்களில் பொருத்தப்ட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, கடந்த 3 மாதங்களாக பதிவான காட்சிகள், வீட்டிற்கு வந்துசென்ற நபர்கள் உள்ளிட்டவை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் மென்பொறியாளர்கள் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டதாக தெரிகிறது.
வருமான வரித்துறையினர் சோதனையின் முடிவில், கணக்கில் வராத ரூ. 200 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கணக்கில் வராத ரூ.26 கோடி ருபாய் ரொக்கம் மற்றும் ரூ. 3 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை நடிகர் சூர்யா, தயாரிப்பாளரும், எம்,எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை குறி வைத்து நடத்தப்பட்டதாக பல்வேறு தகவல்கள் உலா வருதற்கிடையே, மதுரை அன்புச்செழியன் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் பல வில்லங்கமான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரையை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் இருவர், விஐபி மகன் ஒருவர், முன்னாள் மேயர் ஒருவர் ஆகியோர் சம்பந்தப்பட்ட வரவு செலவு கணக்குகள் சிக்கியுள்ளதாகவும், உயர்மட்டத்தில் இருக்கும் அரசு அதிகாரிகள் சிலரது பணமும் அவரிடம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, பிரபல நடிகை ஒருவருடன் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு இருக்கும் தொடர்பு குறித்த ஆதாரங்களும் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆதாரங்களை கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பாயலாம் என்கின்றனர் வருமான வரித்துறை வட்டாரங்களில்.