சென்னை: நாளை டெல்லி புறப்பட்டுச் செல்லும் முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மாநிலம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்கிறார்.
தமிழக முதல்வராக ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டில் பொறுப்பேற்ற பிறகு, டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழகத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தினார். பிரதமர்தமிழகம் வந்தபோதும் பல்வேறுகோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினார். அதில் நீட் தேர்வு, ஜிஎஸ்டி இழப்பீடு நீட்டிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் நிலுவையில் தொடர்கின்றன.
இந்த நிலையில், 44-வது செஸ்ஒலிம்பியாட் போட்டியை நடத்த தமிழக அரசுக்கு அனுமதி கிடைத்தது. இதற்காக ரூ.102 கோடி நிதிஒதுக்கி, சிறப்பான வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
இதற்கிடையே, முதல்வர் ஸ்டாலின் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தொடர்பு கொண்டுநலம்பெற வாழ்த்திய பிரதமர் மோடியிடம், செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க தமிழகம் வருமாறு முதல்வர் அழைப்பு விடுத்தார்.
அத்துடன், டி.ஆர்.பாலு, கனிமொழி தலைமையில் எம்.பி.க்கள் குழுவினர் நேரில் முதல்வரின் அழைப்புடன் பிரதமர் மோடியை சந்தித்தனர். இதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 28-ம் தேதி சென்னைநேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று, போட்டியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கடந்த ஆக.9-ம் தேதி போட்டியின் நிறைவு விழா நடைபெற்ற நிலையில், போட்டியை சிறப்பாக நடத்தியதற்காக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இதற்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், இதுபோல இன்னும் பல சர்வதேச போட்டிகளை நடத்தும் வாய்ப்புகளை தமிழகத்துக்கு தரவேண்டும் என்றும், தொடர்ந்து தங்களது ஆதரவை தமிழகத்துக்கு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில், முதல்வர் ஸ்டாலின் நாளை (ஆக.16) டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். அன்று இரவுடெல்லியில் தங்கும் முதல்வர், மறுநாள் 17-ம் தேதி காலை, குடியரசுத்தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள திரவுபதி முர்மு மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார்.
தொடர்ந்து, 17-ம் தேதி மாலைபிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது, செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவுக்காக பிரதமர் சென்னை வந்ததற்கு நன்றி தெரிவிப்பதுடன், கோரிக்கைகள் அடங்கிய மனுவையும்அளிக்கிறார். முதல்வர் அன்றுஇரவே சென்னை திரும்புகிறார்.
இந்த சந்திப்பின்போது, தமிழகத்துக்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகள், ஜிஎஸ்டி இழப்பீட்டை நீட்டிப்பது, மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்தம், நீட் தேர்வில்தமிழகத்துக்கு விலக்கு அளிப்பதுதொடர்பாக குடியரசுத் தலைவரிடம் இருக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாகவும், தமிழகத்துக்கு தேவையானபுதிய திட்டங்கள் குறித்தும் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.