மும்பை : ‘இந்தியாவின் வாரன் பபெட்’ என வர்ணிக்கப்படும், முன்னணி பங்குச் சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, 62, மாரடைப்பால் மும்பையில் நேற்று காலமானார்.இந்திய பங்குச்சந்தையின் முன்னணி முதலீட்டாளரும், பெரும் தொழிலதிபருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, நாட்டின் 36வது பணக்காரராகஅமெரிக்காவின், ‘போர்ப்ஸ்’ பத்திரிகையால் 2021ல் பட்டியலிடப்பட்டவர். இவரது சொத்து மதிப்பு, 46 ஆயிரம் கோடி ரூபாயாக கணக்கிடப்பட்டது.
‘ஆகாசா ஏர்’
மஹாராஷ்டிராவின் மும்பையில் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் வசித்து வந்தார். மும்பை பங்குச்சந்தை அமைந்துள்ள தலால் தெருவின், ‘பிக் புல்’ என்று அழைக்கப்படும் இவர், 36க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்துஇருந்தார். டாடா குழுமத்தின் கைக்கடிகாரம் மற்றும் நகைகள் தயாரிப்பு நிறுவனமான, ‘டைட்டன்’ நிறுவனத்தில் மட்டும், 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இவரது முதலீடுகள் உள்ளன.இவை தவிர, ‘ஸ்டார் ஹெல்த், ராலீஸ் இந்தியா, எஸ்கார்ட்ஸ், கனரா வங்கி, இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி, ஆக்ரோ டெக் புட்ஸ், நஸாரா டெக்னாலஜிஸ், டாடா மோட்டார்ஸ்’ உள்ளிட்ட நிறுவனங்களில் பெரிய அளவில் இவரது முதலீடுகள் உள்ளன.’ஹங்காமா மீடியா’ மற்றும் ‘ஆப்டெக்’ நிறுவனங்களின் தலைவராகவும், ‘வைஸ்ராய் ஹோட்டல்ஸ், கான்கார்ட் பயோடெக், ப்ரோவோக் இந்தியா, ஜியோஜித் பைனான்ஷியல் சர்வீசஸ்’ ஆகிய நிறுவனங்களின் இயக்குனர்கள் குழுவிலும் இடம்பெற்று இருந்தார்.’ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி வினய் துபேவுடன் இணைந்து, மலிவு விலையில் பயணியர் விமான போக்குவரத்து சேவை அளிக்கும், ‘ஆகாசா ஏர்’ நிறுவனத்தை துவக்கினார். இந்த நிறுவனம் சமீபத்தில் தான் சேவையை துவக்கியது. இதன் துவக்க விழா நிகழ்ச்சி தான் ஜுன்ஜுன்வாலா பங்கேற்ற கடைசி பொது நிகழ்ச்சியாக அமைந்தது.கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு மற்றும் இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். சக்கர நாற்காலியில் வரும் அளவுக்கு அவரது உடல்நிலை மோசமாக இருந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சமீபத்தில் வீடு திரும்பினார்.
மாரடைப்பு
இந்நிலையில், நேற்று காலை அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. உடனடியாக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் ஏற்கனவே பிரிந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்கள், கவுதம் அதானி உள்ளிட்ட தொழிலதிபர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் வாரன் பபெட் போல் செயல்பட்டதால், ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவை ‘இந்தியாவின் வாரன் பபெட்’ என, பலரும் அழைத்தனர்.
யார் இந்த ஜுன்ஜுன்வாலா?
ராஜஸ்தானி குடும்பத்தில் 1960, ஜூலை 5ல் பிறந்த ஜுன்ஜுன்வாலாவின் தந்தை, மும்பை நகரில் வருமான வரித்துறை கமிஷனராக பணியாற்றினார். அதனால் இவரது பள்ளி, கல்லுாரி படிப்புகள் மும்பையில் கழிந்தன. பங்குச் சந்தையில் இவரது தந்தை முதலீடு செய்வதை பார்த்து, அதில் ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் இவர் பங்குச் சந்தையில் முதலீடுகள் செய்ய அவரது தந்தை அனுமதிக்கவில்லை.அதனால், உறவினர் ஒருவரிடம் 5,000 ரூபாய் கடன் பெற்று, தன் முதல் பங்கு சந்தை முதலீட்டை 1985ல் துவங்கினார். அப்போது மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் குறியீடு 150 ஆக இருந்தது. இன்றைக்கு 59 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தகம் நடக்கிறது. கடந்த 1986ல், ‘டாடா டீ’ நிறுவனத்தின், 5,000 பங்குகளை தலா, 43 ரூபாய்க்கு வாங்கினார். மூன்று மாதங்களின் ஒரு பங்கின் விலை 143 ரூபாயாக உயர்ந்தது. பங்குசந்தை முதலீட்டில் ஜுன்ஜுன்வாலா சம்பாதித்த முதல் பெரிய லாபமாக இது கருதப்படுகிறது. பங்கு சந்தையில் முதலீடு செய்ய துவங்கிய மூன்று ஆண்டுகளில் 20 – 25 லட்சம் ரூபாய் லாபம் சம்பாதித்தார்.அதன் பின் இவரது பெயரின் முதல் இரண்டு எழுத்து மற்றும் மனைவி ரேகாவின் பெயரில் உள்ள முதல் இரண்டு எழுத்தை வைத்து, ‘ரேர் என்டர்பிரைசஸ்’ என்ற பங்கு சந்தை வர்த்தக நிறுவனத்தை துவக்கினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்