ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த மதுரையை சேர்ந்த லட்சுமணன் உடலுக்கு மரியாதை செலுத்திவிட்டு மதுரை விமான நிலையத்திலிருந்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரில் திரும்பிய போது பாஜக தொண்டர்கள் அவரது காரைசுற்றி வளைத்து காரின் மீது செருப்பு வீசினர்.
காலையில் கண்டிப்பு நள்ளிரவு மன்னிப்பு
இந்த சம்பவம் தொடர்பாக பாஜக மாவட்ட தலைவர் என்ற வகையில் டாக்டர் சரவணன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் அமைச்சரை மிகக்கடுமையான முறையில் தாக்கி பேசினார்.
பிறகு நேற்று நள்ளிரவே அவசர அவசரமாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து மனதில் இருந்த அனைத்தையும் கொட்டி தீர்த்துவிட்டு மன்னிப்பு கேட்டதாக செய்தியாளர்களிடம் கூறினார். அத்துடன் பாஜகவில் இருந்து விலகுவதாவும், திராவிடம் என் ரத்தத்தில் உள்ளது திமுக இணைகிறேன் என்றெல்லாம் கூறினார்.
மூன்று மாத ஸ்கெட்ச்
பாஜகவிலிருந்த டாக்டர் சரவணனை திமுக தங்கள் வசம் இழுக்க மூன்று மாதங்களாக ஸ்கெட்ச் போட்டு தக்க நேரத்திற்காக காத்திருந்தது. பாஜக தென்தமிழ்நாட்டில் ஊன்ற வேண்டும் என்றால் மதுரையை கைப்பற்றினால், அதனை மையமாக வைத்து ஆறு மாவட்டங்களில் கட்சியை வளர்த்துவிடலாம் என்பது பாஜகவின் திட்டம்.
அதற்காக டாக்டர் சரவணனை பாஜக பயன்படுத்தியது. திமுக சீட் கொடுக்க மறுத்தது, ஆனால் பாஜகவில் இணைந்த மூன்று மணி நேரத்தில் அவர் மதுரை வடக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அந்த தேர்தலில் தோல்வியை தழுவினார். ஆனாலும் மதுரை மாவட்ட பாஜக தலைவர் பொறுப்பை பெற்றார்.
அப்போது இருந்து டாக்டர் சரவணன் பெயர் போட்டு மதுரை முழுவதும் போஸ்டர் அதிகரிக்க துவங்கின. பாஜகவிற்கு போஸ்டர் உபயம், தலைவர்கள் பொதுக்கூட்டம் நடைபெற்றால் ஆட்களை அழைத்து வருவது என்று பணத்தை வாரி இறைத்து திமுகவிற்கு முட்டுக்கட்டையாக இருந்து வந்துள்ளார்.
மதுரை திமுகவில் நடக்கும் உட்கட்சி பூசல் டாக்டர் சரவணனுக்கு சாதகமாக அமைந்தது. இந்நிலையில் திமுகவிலிருந்து மூன்று முறை டாக்டர் சரவணனுக்கு தூது விடப்பட்டது. ஆனால் அவர் கடைசி வரை பாஜகவிற்கு தான் விஸ்வாசமாக இருப்பேன் அறிக்கையும் வெளியிட்டு இருந்தார்.
அங்கீகாரம் இல்லை
திமுகவில் எம்.எல்.ஏவாக இருந்த போதே சொந்த பணத்தில் தொகுதிக்கு செலவு செய்து நன்மதிப்பை பெற்றவர். கட்சிக்கு செலவு செய்வார் என்ற ஒரு தகுதி அடிப்படையில் தான் அவர் மதுரை பாஜக தலைவராக நியமிக்கபட்டார்.
கட்சி கூட்டத்திற்கு பந்தல் போடுவதிலிருந்து போஸ்டர், கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பது , சாப்பாடு என அனைத்தையும் சமாளித்தவர் டாக்டர் சரவணன். ஆனால் செலவுக்கு மட்டும் அவரை பயன்படுத்திக்கொண்டு மற்ற நேரத்தில் இவரை பாஜக கண்டுகொள்வதில்லை.
மூத்த நிர்வாகி என்ற பெயரில் பேராசிரியர் சீனிவாசனுக்கு தான் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. இந்த அதிருப்தியில் தான் சமீபத்தில் மதுரையில் விதி மீறி பிளக்ஸ் பேனர் வைத்திருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் அகற்ற முயன்ற போது அவர்களுடன் மல்லுக்கு நின்றார்.
ஆனால் அதில் பாஜக தலைமையை பெரிதாக கவரவில்லை. இதனாலேயே கடந்த மூன்று மாதங்களாக அதிருப்தியில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடைசி முயற்சியாக நேற்று நடந்த சம்பவத்தையும் நிகழ்த்தியுள்ளார். ஆனால் அந்த சம்பவம் மூலம் ஒட்டு மொத்த திமுகவினரின் கொந்தளிப்புக்கு ஆளாக பாஜக தலைமை பின்வாங்கி விட டாக்டர் சரவணன் கொத்தாக மாட்டிக்கொண்டார்.
இதனை தனக்கான வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு திமுக தலைமை இரவோடு இரவாக டாக்டர் சரவணனை தட்டி தூக்கியுள்ளது. அரசியல் களத்தில் கட்சி விட்டு கட்சி தாவுவது ஒன்றும் புதிதல்ல, ஆனால் மதியம் பேட்டி கொடுத்து சில மணி நேரத்தில் கட்சி தாவியது தான் பார்த்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
செய்தியாளர் செந்தில் குமார்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil