புது டெல்லி: தனது 75வது சுதந்திர தினத்தை (Independence Day) ஆகஸ்ட் 15ம் தேதியான இன்று இந்திய மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். நாட்டு மக்களுக்கு அரசியல் தலைவர்கள் சுதந்திர தின வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். அந்த வரிசையில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி “இந்திய மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து” தெரிவித்துள்ளார். இதனுடன், சுதந்திரப் போராட்ட தியாகிகளை பாஜக தலைமையிலான மத்திய அரசு அவமதித்து விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அரசியல் ஆதாயத்திற்காக உண்மையை மறைத்து பேசப்படும் தவறான பேச்சுக்களை காங்கிரஸ் எதிர்க்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். தற்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். சில வாரங்களுக்கு முன்பாக தான் சோனியா காந்தி கொரோனா தொற்றிலிருந்து மீண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி (Sonia Gandhi) வெளியிட்டுள்ள தனது அறிக்கையில், கடந்த 75 ஆண்டுகளில், நாம் நிறைய சாதித்துள்ளோம். இந்தியா தனது திறமையான இந்தியர்களின் கடின உழைப்பால் அறிவியல், கல்வி, சுகாதாரம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சர்வதேச அரங்கில் அழிக்க முடியாத முத்திரையை பதித்துள்ளது. இந்தியா தனது தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்களின் தலைமையில் சுதந்திரமான, நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தல் முறையை நிறுவியது. அதே நேரத்தில் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு அமைப்புகளை வலுப்படுத்தியது. எப்பொழுதும் உலக நாடுகளுக்கு ஒரு முன்னணி நாடாக இந்தியா தனது பெருமையை அடையாளப்படுத்தி உள்ளது.
கடந்த 75 ஆண்டுகளில் நாம் பல சாதனைகளைச் செய்துள்ளோம். ஆனால் தற்போதைய மத்திய அரசாங்கம் சுதந்திரப் போராட்ட வீரர்களின் அளப்பரிய தியாகங்களையும், நாட்டின் பெருமைமிக்க சாதனைகளையும் புறக்கணிப்பதில் பிடிவாதமாக உள்ளது. இதை ஏற்க முடியாது. அரசியல் ஆதாயத்திற்காக வரலாற்று உண்மைகளை தவறாக சித்தரிப்பதையும், காந்தி, நேரு, பட்டேல், ஆசாத் ஜி போன்ற சிறந்த தேசிய தலைவர்களை குறித்து பொய்யான பிம்பத்தை ஏற்படுத்த நினைக்கும் ஒவ்வொரு முயற்சியையும் இந்திய தேசிய காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும்.
மீண்டும் ஒருமுறை அனைத்து நாட்டு மக்களுக்கும் இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் (Indian Independence Day) என்றும், இந்தியா ஒளிமயமான ஜனநாயக எதிர்காலம் அமைய வாழ்த்துகள். ஜெய்ஹிந்த்” என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளர்.
சோனியா மற்றும் ராகுல் காந்தி கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேயும் கோவிட் நோயை எதிர்க்கொண்டு உள்ளர்.