சென்னை : நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், 2008 ம் ஆண்டு முதல் தயாரிப்பு, விநியோகம் ஆகியவற்றை செய்து வருகிறது. இந்நிறுவனம் துவங்கிய 15 ஆண்டுகள் கடந்து விட்டதை சமீபத்தில் விழா எடுத்து கொண்டாடினர்.
டைரக்டர் தமிழ்வாணன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தை தயாரிக்கும் நோக்கத்துடன் தான் ரெட் ஜெயண்ட் மூவிஸ் துவங்கப்பட்டது. ஆனால் அந்த படம் முடியாமல் போனதால் தங்களின் முதல் தயாரிப்பாக விஜய்யின் குருவி படத்தை தயாரித்தனர்.
சூர்யாவின் ஆதவன்,7 ம் ஆறிவு, கமலின் மன்மதன் அம்பு ஆகிய படங்களை தயாரித்த இந்த நிறுவனம், தொடர்ந்து பல படங்களை விநியோகம் செய்யவும் துவங்கியது. பிறகு உதயநிதி ஸ்டாலின் நடித்த படங்களை தயாரிக்க துவங்கியது. கடைசியாக உதயநிதி நடித்த கண்ணே கலைமானே படத்தை தயாரித்த இந்நிறுவனம், தற்போது மாமன்னன், கலகத் தலைவன் ஆகிய படங்களை தயாரித்து வருகிறது.
சின்னது, பெரியது என பாரபட்சம் பாராமல் பல படங்களையும் வாங்கி விநியோகம் செய்து வருகிறது ரெட் ஜெயண்ட் மூவிஸ். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை எஃப்ஐஆர், எதற்கும் துணிந்தவன், ராதே ஷ்யாம், பீஸ்ட், டான், காத்து வாக்குல ரெண்டு காதல், நெஞ்சுக்கு நீதி, விக்ரம், ராக்கெட்ரி, குலுகுலு, லால் சிங் சத்தா ஆகிய 11 படங்களை விநியோகம் செய்துள்ளது.
இனியும் ஆகஸ்ட் 19 துவங்கி வாரத்திற்கு ஒரு படம் என்ற விகிதத்தில் வரிசையாக முக்கியமான பல படங்களை வெளியிட உள்ளது ரெட் ஜெயண்ட் மூவிஸ். இதுவரை அறிவிக்கப்பட்ட படங்களின் அடிப்படையில்,
ஆகஸ்ட் 19 – திருச்சிற்றம்பலம்
ஆகஸ்ட் 26 – டைரி
ஆகஸ்ட் 31 – கோப்ரா
செப்டம்பர் 8 – கேப்டன்
செப்டம்பர் 15 – வெந்து தணிந்தது காடு
அக்டோபர் 24 – சர்தார்
ஆகிய படங்களின் வெளியீட்டு உரிமத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் பெற்றுள்ளது. இதற்கிடையில் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீசாக உள்ள அதிகம் எதிர்பார்க்கப்படும் தமிழின் பெரிய பட்ஜெட் படமான பொன்னியின் செல்வன் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமத்தையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.