டெல்லி: இந்தியாவை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல அனைவரும் பங்களிக்க வேண்டும். நமது துணிச்சல்மிக்க வீரர்களுக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன். சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலான இந்தியாவின் கலாச்சாரம், எழுச்சிமிகு ஜனநாயக பாரம்பரியம், சாதனைகள் குறித்து பெருமை கொள்ளும் தினம் இது என்று குறிப்பிட்டுள்ளார். நமக்கு சுதந்திரம் வாங்கித் தந்த நமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும், நாட்டின் பாதுகாப்புக்காக அனைத்தையும் தியாகம் செய்த நமது துணிச்சல்மிக்க வீரர்களுக்கும் நான் மரியாதை செலுத்துவதாகவும் தமது டுவிட்டர் பதிவில் அவர் கூறியுள்ளார். வலுவான, தன்னிறைவு மிக்க இந்தியா குறித்து நமது விடுதலைப் போராட்ட வீரர்களின் கண்ட கனவை, பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய சுதந்திரத்தின் நூற்றாண்டு விழா தருணத்தில் இந்தியாவை மீண்டும் விஸ்வ குருவாக மாற்றுவதற்கு, கடின உழைப்பின் மூலம், தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல அனைவரும் பங்களிக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை மந்திரி கேட்டுக் கொண்டுள்ளார்.