விடுமுறை தினங்கள் முடிவடைந்ததை ஒட்டி வெளியூரில் இருந்து சென்னை திரும்ப ஆம்னி பேருந்துகளில் விமான கட்டணங்கள் போல் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.
76 சுதந்திர தினத்தை ஒட்டி சனி, ஞாயிறு மற்றும் திங்கள் என்று தொடர் விடுமுறையால் ஏராளமான மக்கள் சென்னையிலிருந்து அவர்களுது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். வெள்ளி மாலை, இரவு நேரங்களில் அதிக அளவில் சென்னையில் இருந்து பேருந்துகளில் உள் மாவட்டங்களுக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மக்கள் குவிந்தனர். இதனையடுத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பேருந்து கட்டணத்தை தாருமாறாக உயர்த்தினர். அதேபோல், ஆன்லைனில் பதிவு செய்தவர்களிடமும் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. பொதுமக்கள் தரப்பில் புகார்கள் எழுந்ததை அடுத்து, தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அதிக கட்டணம் வசூலிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
தொடர் விடுமுறை முடிவடைந்த நிலையில் மீண்டும் இன்று மாலையில் இருந்து சென்னை திரும்ப இருக்கின்றனர். இதனை பயன்படுத்தி கொண்டிருக்கும் தனியார் ஆம்னி பேருந்துகள் விமான கட்டணம் அளவுக்கு பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளன.
அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் 3 நாடகளுக்கு முன்பு தெரிவித்திருந்த நிலையில், மீண்டும் அதே நிலையில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருக்கின்றனர்.
வழக்கமாக கோயம்புத்தூரில் இருந்து சென்னை வருவதற்கு அதிகபட்சமாக 1200 வசூல் செய்து வரும் நிலையில் தற்போது 2500 முதல் 3000 வரை தனியார் பேருந்துகள் ஆன் லைன் முன்பதிவு செயலிகளின் மூலம் கட்டணத்தை உயர்த்தி உள்ளன. அதேபோல திருச்சியில் இருந்து சென்னை வருவதற்கு அதிகபட்சமாக 900 ரூபாய் கட்டணம் வசூலித்து வந்த நிலையில் தற்போது 2800 ரூபாய் வரை கட்டணம் உயர்ந்துள்ளது.
மேலும் மதுரை, திருச்செந்தூர், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட ஊர்களில் இருந்து சென்னை திரும்புவதற்கு வழக்கமாக வசூலிக்கப்படும் தொகையை விட மூன்று மடங்கு அதிகமாக தனியார் பேருந்துகள் தற்போது கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.
– ராஜ்குமார்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM