மங்களூரு: மங்களூரு விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இண்டிகோ விமானம் மும்பைக்கு புறப்பட தயாராக இருந்தது. பயணிகள் விமானத்தில் ஏறி கொண்டிருந்தனர். அப்போது ஒரு ஆண் பயணி செல்போனில் யாருக்கோ குறுந்தகவலை அனுப்பி கொண்டிருந்தார். மற்றவருடனான அந்த சாட்டிங்கில் சக பயணி தன்னை ஒரு வெடிகுண்டு வைத்திருக்கும் நபர் என குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த அருகில் இருந்த பெண் பயணி அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து விமான பணிப்பெண்களுக்கு அவர் தகவல் அளித்தார். கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் புறப்பட இருந்த விமானத்தை நிறுத்தி வைத்தனர்.விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரையும் கீழே இறக்கிவிட்டு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இந்த சோதனையில் விமானத்தில் பாதுகாப்பு குளறுபடி எதுவும் இல்லை என்று தெரியவந்தது. இதையடுத்து அந்த விமானம் மும்பை செல்ல அனுமதிக்கப்பட்டது. அந்த விமானம் 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. அதன் பிறகு பெண் மற்றும் ஆண் பயணியையும் விமான நிலைய அதிகாரிகள் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த நபர் விமான நிலைய பாதுகாப்பு, விமான பாதுகாப்பு குறித்து விளையாட்டாக செல்போனில் குறுந்தகவல் அனுப்பி சாட்டிங் செய்தது தெரியவந்தது. அதனால் இருவரையும் விமானத்தில் பயணம் செய்ய அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை.