ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பேர்ன் நகரில் லா ட்ரோப் என்ற பல்கலைக்கழகம் இருக்கிறது. இப்பல்கலைக்கழகம் சார்பாகக் கடந்த 2019ம் ஆண்டு நடிகர் ஷாருக்கானுக்குக் கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து, ஷாருக்கானின் மனிதாபிமான சேவைகளைப் பாராட்டி அவரது பெயரில் ஸ்காலர்ஷிப் ஒன்றையும் லா ட்ரோப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
2020ம் ஆண்டே இந்த விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக அது முழு அளவில் அமல்படுத்தப்படவில்லை. ஆனாலும் இந்த ஸ்காலர்ஷிப்பிற்கு இந்தியாவைச் சேர்ந்த கோபிகா என்ற மாணவி தேர்வு செய்யப்பட்டார். தேர்வு செய்யப்பட்ட பிறகு கொரோனாவால் ஆஸ்திரேலியா செல்வதில் சிக்கல் இருந்தது. தற்போது இந்த ஆண்டு தொடக்கத்தில் கோபிகா ஆஸ்திரேலியா சென்று தனது பிஎச்டி படிப்பைத் தொடங்கியிருக்கிறார். ஷாருக்கான் பெயரில் தொடங்கப்பட்டுள்ள ஸ்காலர்ஷிப் ஆண்டுக்கு 32,500 ஆஸ்திரேலியா டாலர்களைக் கொண்டதாகும். நான்கு ஆண்டுகள் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் தங்கி பிஎச்டி ஆராய்ச்சிப்படிப்பை படிக்க முடியும். இது தவிர 3,000 ஆஸ்திரேலியா டாலர்கள் இந்தியாவிலிருந்து மெல்பேர்னுக்கான பயணத்துக்காகக் கூடுதலாக அளிக்கப்படும்.
பெண்களுக்காகவே தொடங்கப்பட்டுள்ள இந்த ஸ்காலர்ஷிப் இரண்டு ஆண்டுகள் தடை பட்டுக்கிடந்த நிலையில் மீண்டும் தற்போது இதற்கான பதிவு தொடங்க இருக்கிறது. இந்த ஸ்காலர்ஷிப் தொகையில் படிக்க மாணவிகள் வரும் செப்டம்பர் 23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதில் சேர விரும்புபவர்கள் www.latrobe.edu.au/srk-scholarship என்ற இணையத்தளத்தில் சென்று விண்ணப்பிக்க முடியும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியா சென்று வருவதற்கான கட்டணத்தைக்கூடப் பல்கலைக்கழகமே வழங்குகிறது.
இப்பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து வரும் கோபிகா இது குறித்துக் கூறுகையில், “இரண்டு ஆண்டுகள் கொரோனாவால் ஆஸ்திரேலியாவிற்குச் செல்ல முடியவில்லை. இப்போது ஆஸ்திரேலியாவிற்கு வந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம். பல்கலைக்கழகத்தில் அனைவரும் எனக்கு ஆதரவாக இருக்கின்றனர். இந்தியாவைச் சேர்ந்த மற்ற பெண்களும் இந்த ஸ்காலர்ஷிப்பிற்கு விண்ணப்பிக்கவேண்டும்” என்று தெரிவித்தார்.
முதுகலைப்பட்டம் படித்தவர்கள் இந்த ஸ்காலர்ஷிப்புடன் கூடிய படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி நடிகர் ஷாருக்கான் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் சேர்ந்து தனது வீட்டில் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தினத்தைக் கொண்டாடினார்.