மகாராஷ்டிராவில் புதிய அமைச்சரவை 40 நாள்களுக்கு பிறகுதான் பதவியேற்றது. எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிப்பு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் 18 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்றுக்கொண்டனர். அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்குவதிலும் இழுபறி ஏற்பட்டது. நேற்று தான் இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு உள்துறை, நிதி மற்றும் திட்டமிடுதல் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. துணை முதல்வருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. முதல்வரிடம் பொது நிர்வாகம், நகர்ப்புற மேம்பாடு, போக்குவரத்து துறைகள் ஒதுக்கப்பட்டது.
ராதாகிருஷ்ண விகே பாட்டீலுக்கு வருவாய்த்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. சந்திரகாந்த் பாட்டீலிடம் உயர் கல்வி, பாராளுமன்ற விவகாரத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சரவையில் கலாச்சாரத்துறை பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ள சுதிர் முங்கந்திவார் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், “அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் போன் எடுத்து பேசும் போது ஹெலோ என்ற வார்த்தைக்கு பதில் வந்தே மாதரம் என்ற வார்த்தையை பயன்படுத்தவேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார். `ஆசாதி கா அம்ருத் மஹோத்சவ்’ என்ற திட்டத்தின் கீழ் இம்முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் சுதிர் முங்கந்திவார் தெரிவித்தார். வரும் ஜனவரி 26-ம் தேதி வரை இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இது தொடர்பாக முறைப்படி வரும் 18ம் தேதி அரசாணையும் பிறப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அரசு ஊழியர்களும், ஒவ்வொரு குடிமக்களும் போனில் வந்தே மாதரம் என்று தொடங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறினார்.