5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பாஜக அரசு ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழத்துவங்கியிருக்கின்றன. ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டிருந்த 5ஜி அலைக்கற்றை ஏலம், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி என்ற மிகக் குறைவான தொகைக்கு விடப்படுள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு 3ஜி அலைக் கற்றைக்கான ஏலம் 50 ஆயிரத்து 968 கோடி ரூபாய்க்கு போனது. அதேபோல கடந்த ஆண்டு நடைபெற்ற 4ஜி அலைக்கற்றை ஏலம் 77 ஆயிரத்து 815 கோடி ரூபாய்க்கு போனது. ஆனால், அதிவேகம் கொண்டதும், ஆற்றல்திறன் மிக்கதுமான 5ஜி அலைக்கற்றை ஏலம் குறைந்த தொகைக்கு போயுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.
பாஜக மீது 5ஜி அலைக்கற்றை ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முதல் ஆளாய் கேள்வி எழுப்பியிருக்கிறார் திமுக எம்.பி.யும், 2ஜி அலைக்கற்றை மோசடியில் சிறை சென்று குற்றவாளி அல்ல என்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவருமான ஆ.ராசா. இந்த நிலையில், 2ஜி வழக்கு மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தினமும் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான முதல் ஆட்சி காலத்தில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீதும் மூன்று தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ 2011ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது. அதேபோல், மத்திய அமலாக்கத் துறையும் தனியாக தொடர்ந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்தது.
டெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் நடைபெற்று வந்த இந்த வழக்குகள் மீதான விசாரணையின் தீர்ப்பு கடந்த 2017ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அதில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும் தீர்ப்பை எதிர்த்து சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டு மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தன. சிபிஐ தரப்பு 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து, எதிர்தரப்பினரின் வாதம் அதே ஆண்டு பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி தொடங்கியது. ஆனால், கொரோனா காரணமாக விசாரணையில் தாமதம் ஏற்பட்டது. இன்றளவும் அந்த தாமதம் நீடித்து வரும் நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த 5ஜி ஏலம் தொடர்பாக ஆ.ராசா குற்றம் சாட்டினார்.
அதன் தொடர்ச்சியாக, கடந்த 2ஆம் தேதி நீதிபதி யோகேஷ் கண்ணா முன்னிலையில், 2ஜி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின், 2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனுக்கள் தினமும் விசாரிக்கப்பட வேண்டும். உயர் நீதிமன்றத்தில் தினசரி விசாரணை நடத்த முடியவில்லை என்றால், சிறப்பு அமர்வை நியமித்து தினமும் விசாரிக்க வேண்டும். இதற்கான தேதியை நீதிமன்றம் நிர்ணயிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாஜகவினர் கூறுகையில், “2ஜி வழக்கில் குற்றச்சாட்டை சிபிஐ சரியாக நிரூபிக்க தவற விட்டுவிட்டது என்றுதான் சிபிஐ நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தில்தான் விசாரணை சென்று கொண்டிருக்கிறது. இதற்கு பிறகு உச்ச நீதிமன்றம் இருக்கிறது. தவறவிட்ட பல விவகாரங்களை சிபிஐ ஆதாரங்களோடு நிரூபிக்க வாய்ப்புள்ளது. அங்கு தீர்ப்பு ரிவர்ஸ் ஆக வாய்ப்புள்ளது.” என்கிறனர்.
மேலும், “ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கூட 4 பேர் குற்றவாளிகள் என குன்ஹா தீர்ப்பளித்தார். அவர்களை குமாரசாமி விடுதலை செய்தார். ஆனால், உச்ச நீதிமன்றத்தில் குன்ஹாவின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. 2ஜி வழக்கில் சிபிஐ தரப்பில் ஆஜரான யு.யு.லலித்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். எனவே, டெல்லி உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு எப்படி வந்தாலும், உச்ச நீதிமன்றம் சென்ற பின்னர் முழுவடிவம் கிடைக்கும்.” என்றும் கூறுகின்றனர். சிபிஐ நீதிமன்றத் தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டாலும்கூட, உச்ச நீதிமன்றத்தில் காட்சிகள் மாற வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இதுபற்றி திமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த சிலர் கூறுகையில், “திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தொடரப்பட்ட வழக்குதான் 2ஜி. அனைவரும் விடுதலை செய்யப்பட்ட பிறகு மேல்முறையீடு என்று மீண்டும் விசாரணைக்கு கொண்டு வந்திருக்கின்றனர். சட்டப்பூர்வமாக வழக்கை சந்திப்போம்.” என்றனர்.
யு.யு.லலித் பற்றி கேட்டபோது, வழக்கறிஞர் என்பவர் வேறு நீதிபதி என்பவர் வேறு. அதனால், அதில் பெரிதாக எந்த பாதிப்பும் இருக்காது என்கின்றனர். ஜெயலலிதா தீர்ப்பை சுட்டிக்காட்டிய போது, முதலில் அளித்த குன்ஹா தீர்ப்புதான் இறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 2ஜி வழக்கிலும் எங்கள் பக்கம் தவறில்லை எனும் போது, சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பே உறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.